அரக்கோணத்தில் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது
வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது;
அரக்கோணம் டவுன் ஹால் தெருவை சேர்ந்தவர் பால்துரை. இவர் அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். அதே தெருவில் அவரது மற்றொரு வீட்டில் கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் தங்கியுள்ளனர். ஊழியர்கள் வழக்கம் போல் நேற்று காலை வீட்டை பூட்டிக்கொண்டு கடைக்கு சென்றனர். சிறிது நேரத்தில் வீட்டு கதவின் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர். அப்போது பூட்டை உடைத்த மர்ம நபரை மடக்கி பிடித்தனர். இதனிடையே அவ்வழியாக ரோந்து பணியில் இருந்த தனிப்பிரிவு போலீஸ்காரர் ராஜேஷ் வீட்டில் கூட்டமாக நிற்பதை கண்டு அங்கு சென்று அவர்கள் பிடித்து வைத்திருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டார். அதில் அவர் காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த இளையராஜா (வயது 40) என்பதும் வீட்டில் திருட முயன்றதும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டு உடைத்து திருட முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.