பொள்ளாச்சியில் பி.ஏ.பி. திட்ட முன்னோடிகளுக்கு சிலை திறப்பு!
பொள்ளாச்சியில் பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத் திட்டத்தை உருவாக்க காரணமான முன்னோடிகள் காமராஜர், சி.சுப்பிரமணியம், வி.கே.பழனிசாமி கவுண்டர், நா.மகாலிங்கம் ஆகியோரின் உருவச்சிலைகள் மற்றும் நினைவு அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.;
பொள்ளாச்சியில் பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத் திட்டத்தை உருவாக்க காரணமான முன்னோடிகள் காமராஜர், சி.சுப்பிரமணியம், வி.கே.பழனிசாமி கவுண்டர், நா.மகாலிங்கம் ஆகியோரின் உருவச்சிலைகள் மற்றும் நினைவு அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். பி.ஏ.பி. திட்டம் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 4.25 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி மற்றும் கேரளா பாலக்காடு மாவட்டத்திற்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. மேற்கு நோக்கி செல்லும் ஆறுகளை கிழக்கு நோக்கி திருப்பி, வறண்ட நிலங்களை வளமாக்கும் நோக்கில் 1962ல் காமராஜர் தலைமையில் திட்டம் நிறைவேற்றப்பட்டது. ரூ.4.29 கோடி செலவில் பொள்ளாச்சி நீர்வளத்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்ட நினைவு அரங்கம், சிலைகள் மற்றும் பி.ஏ.பி. திட்டம் குறித்த புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் பார்வையிட்டார். விழாவில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், அர.சக்கரபாணி, என்.கயல்விழி செல்வராஜ், முன்னாள் மத்திய மந்திரி மு.கண்ணப்பன், அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.