ஓமலூர் சட்டசபை தொகுதியில் உள்ள ஏரிகளில் மேட்டூர் உபரிநீரை நிரப்ப வேண்டும்
கலெக்டரிடம், மணி எம்.எல்.ஏ. மனு;
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவியை, மணி எம்.எல்.ஏ. தலைமையில் விவசாயிகள் நேற்று சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:- கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது மேட்டூர் அணையின் உபரிநீரை கொண்டு ரூ.560 கோடியில் ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 சட்டசபை தொகுதியில் 100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தை அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதில் 6 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டன. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தி.மு.க. ஆட்சியில் இந்த பணிகள் மெத்தனமாக நடைபெற்று வந்தது. தற்போது ஓமலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட வைரனேரி, அரியாம்பட்டி ஏரி, செலவடை ஏரி ஆகியவற்றிற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கான பணிகள் முடிவடைந்து விட்டன. எனவே இந்த ஏரிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து உபரிநீரை திறந்து விட்டு நிரப்ப வேண்டும். இந்த ஏரிகளை நிரப்பினால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.