அதிவேகமாக இயங்கும் தனியார் பேருந்து : மேம்பால பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் விபத்துகள் அதிகரிப்பு – இளைஞர் படுகாயம் !

கோவை அவிநாசி சாலையில் தனியார் பேருந்து மோதியதில் இளைஞர் படுகாயம், வேகக் கட்டுப்பாட்டுக்கு வேண்டும் என மக்கள் கோரிக்கை.;

Update: 2025-08-14 09:17 GMT
கோவை, காந்திபுரத்தில் இருந்து அவிநாசி சாலை செல்லும் போது எல்.ஐ.சி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அண்ணா சிலை முதல் வ.உ.சி பூங்கா சந்திப்பு வரை உள்ள சாலை பல நாட்களாக போக்குவரத்திற்கு மூடப்பட்டு மேம்பால பணிகள் நடந்து வருவதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியில் உள்ளனர். கோவை - அவிநாசி சாலை மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால், சாலை மூடப்பட்டு இருப்பதால், அனைத்து வாகனங்களும் மத்திய மண்டல அலுவலகம் முன்பு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அங்கு அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து திரும்பும் போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காலில் பலத்த காயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அந்த இளைஞரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த யூட்டன்களில் வரும் வாகனங்கள் எப்பொழுதுமே அதிவேகத்தில் வந்து மோதுவதால் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. மேம்பால பணிகள் நடைபெற்று வரும் பகுதிகள் மற்றும் மாநகர பல்வேறு பகுதிகளில் அதிவேகமாக செல்லும் தனியார் பேருந்துகளால் தொடர்ந்து இது போன்ற விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. எனவே தனியார் பேருந்துகளின் வேகத்தை கட்டுப்படுத்த போக்குவரத்து துறை அதிகாரிகளும், காவல் துறையினரும் நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Similar News