முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் சேலத்துக்கு வருகிறார்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.;

Update: 2025-08-14 09:19 GMT
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 18-ந் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. 2-ம் நாள் மாலை நடைபெறும் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ‘வெல்க ஜனநாயகம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மாநாடு நடைபெறும் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கிற்கு செல்கிறார். இந்த மாநாட்டில் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். மாலை 6 மணிக்கு மாநாட்டில் முதல்- அமைச்சர் தனது சிறப்புரையை தொடங்குகிறார். சிறப்புரையை முடித்துக்கொண்டு, மாநாட்டு திடலில் இருந்து இரவு புறப்பட்டு கார் மூலம் தர்மபுரி செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வருகையையொட்டி, போலீஸ் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Similar News