தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
படகு சவாரி செய்து உற்சாகம்;
இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தொடர் விடுமுறை நாளான நேற்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பனி மூட்டத்தால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலையை கண்டு மகிழ்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் குகைகோவில், பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன் போன்ற பல்வேறு இடங்களுக்கு சென்று உற்சாகமாக பொழுதை கழித்தனர். ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ஒண்டிக்கடை ரவுண்டானா பகுதியில் உள்ள உணவகங்களில் கூட்டம் அலைமோதியது. ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். அவர்கள் பனி மூட்டத்தை செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.