காஞ்சி கோவில்களில் திருப்பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
காஞ்சி கோவில்களில் திருப்பணியை விரைந்து முடிக்க கூடுதல் தலைமை செயலர் மணிவாசன் அறிவுறுத்தல்;
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து, 17 ஆண்டு கடந்த நிலையில், கோவிலில் பல்வேறு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, தமிழக அரசு சார்பில், அரசு நிதி, ஆணையர் பொதுநல நிதி, திருக்கோவில் நிதி, உபயதாரர் நிதி என, மொத்தம் 28.48 கோடி ரூபாய் செலவில், 20க்கும் மேற்பட்ட திருப்பணிகள் மற்றும் அலுவலகம், அன்னதானகூடம், குளியல் அறை கட்டுமானம் என, உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 22.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுலா பண்பாடு மற்றும் ஹிந்து அறநிலைத் துறை கூடுதல் தலைமை செயலர் மணிவாசன், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவிலில் நடக்கும் திருப்பணியை நேற்று பார்வையிட்டார். இரு கோவில்களிலும் திருப்பணியை விரைந்து முடிக்குமாறு, அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், சப் - கலெக்டர் ஆஷிக்அலி, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமாரதுரை, உதவி ஆணையர் கார்த்திகேயன், வரதர் கோவில் உதவி ஆணையர் நிர்வாக அறங்காவலர் ராஜலட்சுமி, ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, சரக ஆய்வாளர் அலமேலு உட்பட பலர் உடனிருந்தனர்.