ஏரிக்கரையில் பனை விதைகளை நடவு செய்த இளையோர்கள்.

பனை தொடர்பான விழிப்புணர்வை அதிகப்படுத்தவும், பனைபடு பொருட்களின் பயன்பாட்டை அதிகரித்து பனையேறிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், பெரிய ஏரி மற்றும் சின்ன ஏரிகளின் நீர்வழித்தடங்களை சீரமைக்கவும் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2025-08-24 15:50 GMT
ஏரிக்கரையில் பனை விதைகளை நடவு செய்த இளையோர்கள்..!! பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், அடைக்கம்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கரையில் அடைக்கம்பட்டி மரமே மாற்றம் அறக்கட்டளை, பெரம்பலூர் ரோட்ராக்ட் மற்றும் புதிய பயணம் நண்பர்கள் இணைந்து பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. பச்சைமலைத் தொடரை ஒட்டிய அடைக்கம்பட்டி கிராமத்தில் பெரிய ஏரி மற்றும் சின்ன ஏரி என இரண்டு ஏரிகள் உள்ளது. இந்த இரண்டு ஏரிகளுக்கும் பச்சைமலைத்தொடரில் பெய்யும் மழை நீரானது ஓடைகள் வழியே வந்து சேர்கிறது. இந்த இரண்டு ஏரிகளும் நிரம்பினால் வெளியேறும் நீரானது டி.களத்தூர் ஏரிக்குச் செல்லும்படியான கட்டமைப்பு உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு உணவுகளை வழங்குவதோடு நிலத்தடி நீர்மட்ட ஆதாரம், பனங்காடை உள்ளிட்ட பல்லுயிர்களின் ஆதாரமாகவும் பனை மரங்கள் விளங்குகிறது. நம் தாய்மொழியான தமிழ்மொழியின் பெருமையை உலகறியச் செய்த பனை ஓலைகளை வழங்கிய பனை மரங்களின் நன்மைகளைக் கருத்தில் கொண்டு பனை மரங்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் மரமே மாற்றம் அறக்கட்டளை , பெரம்பலூர் ரோட்ராக்ட் , மற்றும் புதிய பயணம் நண்பர்கள் அடைக்கம்பட்டி பெரிய ஏரியின் கரையில் ஒன்று கூடி பனை விதைகளை நடவு செய்தனர். மேலும் , அடைக்கம்பட்டி முக்கனத்தம்மன் ஆலயத்தில் நாவல், புளி உள்ளிட்ட மரங்களையும் நடவு செய்தனர். மேலும் பனை தொடர்பான விழிப்புணர்வை அதிகப்படுத்தவும், பனைபடு பொருட்களின் பயன்பாட்டை அதிகரித்து பனையேறிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவும், பெரிய ஏரி மற்றும் சின்ன ஏரிகளின் நீர்வழித்தடங்களை சீரமைக்கவும் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News