மனைவி மதமாற்று விவகாரம் – பா.ஜ.க பிரமுகர் மீது தாக்குதல் : கோவையில் பரபரப்பு
மளிகை கடை ஊழியர் முன்விரோதம் – பா.ஜ.க பிரமுகர் கையை வெட்டி காயப்படுத்திய சம்பவத்தால் பரபரப்பு.;
கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க மண்டல துணைத் தலைவர் அஜய், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அஜயின் மனைவி அடிக்கடி அப்பகுதியில் உள்ள தேவாலயத்துக்கு சென்று மதமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்–மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், தற்போது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனுடன், அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் புகையிலைப் பொருட்கள் மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அஜய் காவல்துறையிடம் புகார் அளித்து வந்ததாக தெரிகிறது. இதனால் கடை ஊழியர் மற்றும் அவரது நண்பர்களுக்கு அஜய்யுடன் முன்விரோதம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று விளாங்குறிச்சி பாலாஜி நகர் பகுதியில் அஜயை வழிமறித்த அவர்கள், கத்தியால் தாக்கி கையை வெட்டி காயப்படுத்தினர். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.