குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி பகுதியில் வெட்டுவெந்நி சந்திப்பில் அரசு மருத்துவமனை உள்ளது. நேற்று அரசு மருத்துவமனையின் உள்பகுதியில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிபெருக்கி பயன்படுத்தி பணி நேரத்தில் ஓண விழா என்ற பெயரில் மருத்துவமனை பணியாளர்கள் குத்தாட்டம் நடத்தினர். ஒலி பெருக்கி பயன்படுத்தப்பட்டுள்ள அதே தளத்தில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணமான மருத்துவமனை பணியாளர்கள் மீது சுகாதாரத் துறையும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்குமா ? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மருத்துவமனைக்கு உள்ளேயே இப்படி ஒரு சம்பவம் நடந்தது மிகவும் வேதனையாக உள்ளது என கருத்து தெரிவித்தனர். குத்தாட்டம் போட்ட சம்பவத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.