குமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி அலுவலகத்தில் மகளிர் திட்ட அலுவலராக பணியாற்றி வருபவர் மணிமாலா ( 39). இவர் சம்பவ தினம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் வந்துவிட்டு, ஊருக்கு அரசு பஸ்ஸில் சென்றார். ஆசாரிபள்ளம் பஸ் நிறுத்தம் பகுதியில் வைத்து மணிமாலாவின் பர்ஸ் மாயமாகி இருந்தது. அதில் ஏடிஎம் கார்டு, ஆதார், பான் கார்டுகள், வங்கி கணக்கு புத்தகம் , ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகள் காணப்பட்டன. யாரோ திருடி சென்றது தெரிய வந்தது. பர்ஸ் மாயமான சிறிது நேரத்தில் பர்சில் இருந்த ஏடிஎம் கார்டு பயன்படுத்தி யாரோ மர்ம நபர் ரூ. 30 ஆயிரத்தை அபேஸ் செய்துள்ளனர். இது குறித்து மணிமாலா ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.