மது போதையில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதாக சிஇஓ புகார்
30க்கும் மேற்பட்டோர் கைது;
பள்ளி மாணவர்கள் நலனுக்காக, பள்ளிகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாவை இந்திய மாணவர் சங்கத்தினர் இரண்டு ஆண்டுகளாக சந்திக்க முடியாத அவல நிலை உள்ளதாகவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை பின் தொடர்ந்து செல்லும் முதன்மை கல்வி அலுவலர், பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளாமல், பள்ளி மாணவர்கள் நலனில் அக்கறையில்லாமல் செயல்பட்டு வருவதாக இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே, இரண்டு ஆண்டுகளாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காணவில்லை என்று இந்திய மாணவர் சங்கம் சார்பில் காந்திமார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை நேற்று இரவில் மாணவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதின் பெயரில் முற்றுகை போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியாவை காணவில்லை எனக்கூறி இந்திய மாணவர் சங்கத்தினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தியதில் இந்திய மாணவர் சங்கத்தினர் மது அருந்தி விட்டு வந்து போராட்டம் நடத்தியதாக கூறி கிருஷ்ண பிரியா காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீஸாரிடம் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 9 பேரை கைது செய்துள்ளனர். இதனை கண்டித்து மீண்டும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவிகள் பேரணியாக கோஷமிட்டு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் மாணவிகள் 20க்கும் மேற்பட்டோரை குண்டு கட்டாக கைது செய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றி சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது