லிப்ட் அறுந்து விழுந்ததில் பெண் தலை நசுங்கி பலி
காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை;
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள மயிலம் சந்தையில் ஜெகநாதன் ஹார்ட்வேர் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு தென்னூர் பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவரின் மனைவி சுமதி (52) பணியாற்றி வந்தார். 3மாடி கட்டிடத்தின் உள்ளே கனரக பொருட்களை கொண்டு செல்ல லிப்ட் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று (வியாழக்கிழமை) இரவு சுமார் 11 மணியளவில் கடையில் உள்ள பொருட்களை லிப்ட் மூலம் மேல் மாடிக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் அறுந்து கீழே விழுந்தது. அந்த சமயம் தரை தளத்தில் நின்று கொண்டிருந்த சுமதி மீது லிப்ட் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே சுமதி தலைநசுங்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பலியான சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது