போலீஸார் மீதான தாக்குதல்: நயினார் நாகேந்திரன் கண்டனம்
கடந்த 4 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் காவல் துறையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை புளியந்தோப்பு பகுதியில் மதுபோதையில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை மடக்கிப் பிடித்த போலீஸார் மீது, நடுரோட்டில் போதைக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட பிறகும்கூட, ஆய்வாளரின் முன்னிலையிலேயே கொஞ்சம்கூட பயமின்றி, தகாத வார்த்தைகளால் கொலை மிரட்டல் விடுவது, காவல் நிலையத்தை அடித்து நொறுக்குவது என அராஜகமாக நடந்துள்ளது கண்டனத்துக்குரியது. காவல் துறையினர் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை, குற்றவாளிகளுக்கு பயமில்லை. கடந்த 4 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் காவல் துறையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இது பெரும் ஆபத்தானது. எனவே, காவல் துறையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவர்கள் எவ்வித சமரசமுமின்றி பணியாற்ற தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.