நடுவூர் கால்நடைப் பண்ணையை கையகப்படுத்த எதிர்ப்பு

எதிர்ப்பு;

Update: 2025-09-13 14:06 GMT
தஞ்சாவூர் அருகே நடுவூர் அரசு கால்நடை பண்ணையை, சிப்காட் தொழிற்மையமாக மாற்றுவதை கைவிட வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியது: தமிழகத்தில் சிப்காட், சிட்கோ அமைக்கிறோம் என்கிற பெயரில் வேளாண் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான ஆராய்ச்சி நிலங்களை கைப்பற்றுவதும், கால்நடை பண்ணைகளை அபகரிப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாக விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் வேளாண் பல்கலைக்கழக தென் மண்டல ஆராய்ச்சி நிலையத்துக்கு சொந்தமான 205 ஏக்கர் நிலத்தை கைப்பற்றி சிப்காட் அமைக்க நடவடிக்கை எடுத்தனர். இதனை எதிர்த்து போராட்டம் நடத்திய பிறகு திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு திருவாரூர் மாவட்டம் கொருக்கை கால்நடை பண்ணைக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைப்பதற்கு முயற்சி எடுத்தனர். விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போது தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு கால்நடை கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதன் அருகே நடுவூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசுக்கு சொந்தமான கால்நடை ஆராய்ச்சி பண்ணை உள்ளது. இதில் 1,700 ஏக்கர் நிலத்தில் எருமை,பசு உள்ளிட்ட காளைகள் ஆயிரக்கணக்கில் வளர்க்கப்பட்டு ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அப்பண்ணைக்கு சொந்தமான விளை நிலங்கள் 500 ஏக்கரை அபகரித்து சிப்காட் மற்றும் சிட்கோ அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சிப்காட் அமைக்கப்பட்டால் தொழிற்சாலைகள் மூலம் அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். இதனால் கால்நடைகளுக்கு பெரும் ஆபத்துகள் நேரிடும். எனவே இந்த திட்டத்தை வன்மையாக கண்டிக்கிறோம். சிப்காட் அமைப்பதை அரசு கைவிட வேண்டும். ஏற்கனவே திமுக தனது 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கூடுதலான பல்கலைக்கழகங்கள் மற்றும் வேளாண் கல்லூரிகள் திறக்கப்பட்டு, வேளாண்மையை ஊக்கப்படுத்துவோம், மேம்படுத்துவோம் என்று கூறிவிட்டு தற்போது ஆராய்ச்சி பண்ணைகளையும், கால்நடை பண்ணைகளையும் அழிக்க நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை அனுமதிக்க மாட்டோம். எனவே, தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு சிப்காட் அமைப்பதை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பண்ணையை இன்றைய தேவைக்கு ஏற்ப, மேம்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த செப்.23 ல் தமிழகம் தழுவிய மாநாடு நடூரில் நடத்த உள்ளோம் என்றார். அப்போது, சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.திருப்பதி, தஞ்சாவூர் மண்டல தலைவர் துரை.பாஸ்கரன், மாநில இளைஞரணி செயலாளர் ஒக்கநாடு மகேஸ்வரன், திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன், தஞ்சாவூர் மாவட்ட தலைவர் ஊரணிபுரம் ரவிச்சந்திரன், செயலாளர் பிரபாகரன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பத்மநாபன், இயற்கை விவசாயி சதீஷ் உள்ளிட்ட விவசாயிகள் நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக, கால்நடை பண்ணையை சிப்காட் தொழிற்மையமாக மாற்றும் முடிவை கைவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

Similar News