வாரியங்காவல் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2025-09-14 08:30 GMT
ஜெயங்கொண்டம், செப்.15- ஜெயங்கொண்டம் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதை கண்டித்து கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வேப்பமரம், புங்கமரம் உள்ளிட்ட நாட்டு இன மரங்கள் 20-க்கும் மேற்பட்ட வளர்ந்திருந்தன இந்த மரங்களை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூத்த செவிலியராக பணியாற்றும் ருக்குமணி (53) என்பவர் வாரியங்காவல் பகுதியில் உள்ள நாகமுத்து என்ற மர வியபாரியிடம் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து நாகமுத்து அந்த மரங்களை வெட்டி வண்டியில் ஏற்ற முயற்சித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மரங்களை ஏன் வெட்டினீர்கள் என்று கேட்டதற்கு மூத்த செவிலியர் ருக்குமணி பொறுப்பில்லாமல் பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். இது குறித்த ஜெயங்கொண்டம் போலீசாருக்கும், பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த செய்தியை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியரிடம் தெரிவித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்து பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கிய இடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் கூறும்போது :- சம்பந்தப்பட்ட மூத்த செவிலியர் ருக்குமணி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து அவரை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதுடன் அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கரராக தெரிவித்தனர். மேலும் இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என எச்சரித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் வாரியங்காவல் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News