ஸ்டாலின் ஆட்சியில் ஆம்லேட்டில் கூட கஞ்சா கலக்குகிறார்கள்" அடங்காத போதையை அம்பலப்படுத்தும் இபிஎஸ்: மக்கள் வெள்ளத்தில் பிரச்சாரம்..
ஸ்டாலின் ஆட்சியில் ஆம்லேட்டில் கூட கஞ்சா கலக்குகிறார்கள்" அடங்காத போதையை அம்பலப்படுத்தும் இபிஎஸ்: மக்கள் வெள்ளத்தில் பிரச்சாரம்..;
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்தித்தார். முதலில் ராசிபுரம் ஆத்தூர் சாலையில், அண்ணா சிலை அருகே திரண்டிருந்த மக்கள் மத்தியில் எழுச்சியுரை நிகழ்த்தினார். இந்த சிறப்பான ஏற்பாட்டை முன்னாள் அமைச்சர் கழக அமைப்புச் செயலாளர் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான பி. தங்கமணி, மற்றும் முன்னாள் அமைச்சர் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் டாக்டர் வெ. சரோஜா ஆகியோர் செய்திருந்தனர். தொடர்ந்து பொது மக்கள் இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசும்போது.. ‘’தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால், ஏற்கெனவே திமுகவால் தமிழகம் தலைகுனிந்துவிட்டது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் கருணாநிதி குடும்பத்தினர் இந்திய அளவில் தமிழகத்தை தலைகுனிய வைத்துவிட்டனர். கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தனர். திமுக மத்திய மந்திரிகளால் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது. இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் உள்ளன என்றாலும் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசு. ஊழலின் ஊற்றுக்கண் திமுக. எல்லா துறைகளிலும் ஊழல் நடக்கிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஏழை மக்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை கிடைக்கவில்லை. சீர்காழி மருத்துவமனையில் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த கர்பிணிகள் பிரசவத்திற்குச் சேர்ந்தனர். 27 கர்ப்பிணிப் பெண்களுக்கு தவறான ஊசி செலுத்தப்பட்டு சிக்கலாகியுள்ளது. மாரத்தான் மந்திரி ஓடிக்கொண்டே இருக்கிறாரே தவிர, அரசு மருத்துவமனைகளை கவனிப்பதே இல்லை. ஜூலை 7ம் தேதி நான் எழுச்சிப் பயணம் தொடங்கினேன். இன்று 154வது தொகுதியாக ராசிபுரத்தில் உங்களை சந்திக்கிறேன். முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியது போன்று, ஒரு மணிநேரம் மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்து சேர்ந்திருக்கிறேன். இதை பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின், சுந்தரா டிராவல்ஸ் பஸ்ஸில் இபிஎஸ் கிளம்பிவிட்டார் என்கிறார். ஸ்டாலின் அவர்களே நான் பஸ்ஸை எடுத்ததில் இருந்து உங்களுக்குப் தூக்கம் போய்விட்டது. பிங்க் கலர் பஸ்ஸில் வந்து என்னை முந்திச்செல்வேன் என்று உதயநிதி பேசுகிறார். அது எப்படிப்பட்ட பஸ்..? மழை பெய்தால் ஒழுகுகிறது, மேற்கூரை காற்றில் பறக்கிறது, டயர் கழன்றுகொண்டு ஓடுகிறது, சென்னையில் ஒரு பெண் அமர்ந்துஇருந்தபோது ஃபுட் போர்டு உடைந்தது. அப்படிப்பட்ட பேருந்தில் பயணம் செய்துவந்து நம்மைப் பிடிக்கிறாராம், உதயநிதி அவர்களே 2026 அல்ல, 2031 அல்ல, 2036லும் பிங்க் கலர் பஸ்ஸில் வந்து எங்கள் பேருந்தை நெருங்க முடியாது. இந்த பஸ் ஜெட் வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. பிங்க் கலர் பேருந்து என்ன நிலையில் இருக்கிறதோ, அதே கண்டிஷனில்தான் திமுக இருக்கிறது. ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருமையாக இருக்கிறது, எனவே இதே இடத்தில் செயல்பட வேண்டும் என்று போராட்டம் செய்தோம். ஆனால் திட்டமிட்டு தனியார் ஒருவர் 140 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறார். அதிலிருந்து குறிப்பிட்ட ஏக்கர் நிலம் பெற்று 7 கிலோமீட்டர் தள்ளி பேருந்து நிலையம் அமைக்கிறார்கள். அங்கிருந்து எப்படி நகரத்துக்குள் மக்கள் வரமுடியும்? அந்த 140 ஏக்கர் நிலம் திமுக மேலிடத்தின் மூலம் வாங்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையம் வந்ததும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் எல்லாம் அதிக விலைக்கு விற்கப்படும். இப்படி விஞ்ஞான முறையில் கொள்ளையடிக்கிறது திமுக அரசு. அதிமுக ஆட்சியில் ராசிபுரம் தொகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி தண்ணீர் வழங்குவதற்கு 932 கோடி ரூபாய் திட்டம் அறிவித்து ஆரம்பிக்கப்பட்டு, அதில் 40% பணிகள் முடிந்தன. வல்லசமுத்திரம், எலச்சிபாளையம், பரமத்தி ஆகிய ஒன்றியங்களும் 724 கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கத் திட்டமிட்டு தொடங்கப்பட்டது. இது அதிமுக கொண்டுவந்த திட்டம் என்பதால் திமுக அரசு திட்டமிட்டு முடக்கிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும். ஸ்டாலின் முதன்முதலில் சட்டமன்றத்தில் பேசும்போது இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று சொன்னார் என்று உதயநிதி கூறுகிறார். அது அப்பட்டமான பொய். அப்படி ஸ்டாலின் பேசவே இல்லை. மக்களிடம் வரவேற்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தவறான செய்தியை தெரிவிக்கிறார். 1990ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொன்னம்மாள் அவர்கள் சட்டமன்றத்தில் ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் பரிசீலனையில் இருக்கிறாதா என்று அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் கண்ணப்பனிடம் கேட்டார், அமைச்சர் இல்லை என்றார். மீண்டும் பொன்னம்மாள் நான்கில் ஒரு பங்கு மாணவர்களிடம் வசூல் செய்து திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு அமைச்சர், ‘இப்போது மூன்றில் ஒரு பங்கு கட்டணச் சலுகை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது’ என்று தெரிவித்திருக்கிறார். அப்படியென்றால், ஸ்டாலின் அவர்கள் முதன்முதலில் பேசும்போது பஸ் பாஸ் கொடுப்பதாக தெரிவிக்கவில்லை என்பதுதானே உண்மை? இதன்மூலம் உதயநிதி பேச்சு அம்பலப்பட்டுவிட்டது. மின் கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். ஆண்டுக்கு 5% உயர்வு. தொழிற்சாலை, கடைகளுக்கு பீக் ஹவர் கட்டணம் மாலை 6 முதல் 10 மணி வரை என்று தனியாக வசூலிக்கிறார்கள். குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான். ஆண்டுக்கு 6% வரி உயர்வை மக்கள் மீது சுமத்தியது திமுக. மதுரை மாநகராட்சியில் 200 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது வெட்கக்கேடானது. ஆட்டுக்கு, மாட்டுக்கு, பன்றிக்கு எல்லாம் வரி போட்டார்கள். பன்றிக்கு போட்ட வரியிலும் ஊழல் செய்த ஒரே அரசு திமுக அரசு. மக்களுக்குத் தேவையான குடிநீர் வசதி, கழிவுநீர் வெளியேற்றம், குப்பை அகற்றுதல், தெரு விளக்கு எரிய வைப்பதற்காகவே வரிகள் வசூலிக்கப்படுகிறது. இவற்றில் எதிலெல்லாம் கொள்ளையடிக்க முடியும் என்று கண்டுபிடித்து கொள்ளையடிக்கும் அரசு திமுக அரசு. மதுரையில் மேயரின் கணவரை கைது செய்துள்ளனர், 5 மண்டலக்குழு தலைவர், 2 நிலைக்குழு தலைவர் ராஜினாமா செய்துள்ளனர், திமுக ஆட்சியில் திமுக அரசே முறைகேடு நடைபெற்றதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளது. காஞ்சிபுரத்திலும், நெல்லையிலும், கோவையிலும் திமுக கவுன்சிலர்களுக்கும் மேயருக்கும் பங்கு பிரிப்பதில் சண்டை. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இவை எல்லாமே முழுமையாக விசாரிக்கப்படும். கொள்ளையடித்த பணத்தை இவர்களிடம் இருந்து வசூல் செய்வதற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். நகை, பணம் போல் கிட்னியை திருடுகிறார்கள். திமுகவினர் மருத்துவமனைக்குப் போனால், உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்று பரிசோதனை செய்துகொள்ளுங்கள். திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடைபெற்றதாக திமுக அரசே கண்டுபிடித்தது. ஆனால், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை மட்டும் ரத்து செய்துள்ளனர், யாரையும் கைது செய்யவில்லை. வறுமையின் காரணமாக பணத்தாசை காட்டி கிட்னி திருடுவதை மன்னிக்க முடியுமா? உங்க மாவட்டத்தில் பணத்தாசை காட்டி ஒரு பெண்ணுக்கு கிட்னிக்கு பதிலாக கல்லீரல் எடுத்துவிட்டனர். திமுக எம்.எல்.ஏ பேட்டி கொடுக்கும்போது, ’நாங்கள் வைத்திருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் 12 கோடி ரூபாய். இதை வாங்க வேண்டும் என்றால் இந்தப் பகுதியில் இருக்கும் அத்தனை பேரின் கிட்னியையும் கழற்ற வேண்டும்’ என்று தெனாவெட்டாகப் பேசுகிறார். அவருக்கு எவ்வளவு கொழுப்பு.? அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. கஞ்சா சாக்லெட் வடிவத்தில் வந்துள்ளது. இப்போது ஆம்லேட்டில் கூட கஞ்சாவை கலக்கி போடுகிறார்கள். போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பதால் இளைஞர்கள் சீரழிகிறார்கள். நான் பலமுறை சொல்லியும் முதல்வர் கண்டுகொள்ளவில்லை. அதனால் போதை மாநிலமாக உருமாறிவிட்டது. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துங்கள் என்று பலமுறை நாங்கள் சொல்லியும் முதல்வர் கேட்கவில்லை. ஆனால் இப்போது, ‘மாணவர்களே, இளைஞர்களே போதையின் பாதையில் செல்லாதீர்கள்’ என்று ஸ்டாலின் பேசுகிறார். எல்லோரும் போதைக்கு அடிமையாகி சீரழிந்த பின்னர் சொல்லி என்ன பயன்? எதிர்க்கட்சி சொல்லும்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் தடுத்திருக்கலாம். டிஜிபி ஒருவர் இருந்தார் 2.0, 3.0, 4.0 என்று ஓ போட்டுக்கொண்டே அவர் ஓய்வு பெற்றதுதான் மிச்சம். போதைப் பொருட்களை விற்பதே திமுககாரர்கள். அப்புறம் எப்படி இதனை கட்டுப்படுத்த முடியும்? எல்லா இல்லீகல் தொழில் செய்வதும் திமுககாரர்கள்தான். குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் 2026 தேர்தல். நீட் தேர்வு ரத்து செய்வதுதான் எங்கள் ஆட்சியின் முதல் கையெழுத்து என்றார் ஸ்டாலின், ரத்து செய்தாரா? எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார். நீதிமன்றத்தைக் காரணம் காட்டி கைவிரித்து விட்டார். இதைத்தான் நாங்களும் சொன்னோம். பொய் அறிவிப்பு திமுக வெளியிட்டது அம்பலமாகிவிட்டது. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றார் உதயநிதி, ரகசியம் சொன்னாரா? உதயநிதியின் அப்பாவே அந்த ரகசியத்தை வெளியிட்டுவிட்டார். அதாவது, இனிமேல் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியாது என்று ஸ்டாலினே சொல்லிவிட்டார். ஏழை, விவசாய தொழிலாளி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். அருந்ததியர் மக்கள், ஆதிதிராவிடர் மக்கள் அதிகம் வசிக்கின்றனர், அவர்கள் திருமணம் முடிந்து தனிக்குடித்தனம் செல்கிறார்கள், அவர்களுக்கு வீட்டு மனை இல்லை, வீடு இல்லை என்று கோரிக்கை வந்திருக்கிறது. அவர்களுக்கும் இடம் வாங்கி வீடு கட்டிக் கொடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். தாலிக்குத் தங்கம், திருமண உதவித் திட்டத்தை திமுக அரசு நிறுத்திவிட்டது, அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் தொடரும். அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவுசெய்தவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்கு 75 ஆயிரம் ரூபாய் மானியமாக கொடுக்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் 200 யூனிட் மின்சாரமும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரமும் மானியம் கொடுத்தோம். பசுமை வீடுகள் கட்டிக்கொடுத்தோம். கைத்தறி ஆதரவு திட்டம், கைத்தறி துணிகள் தேக்கமடைந்தபோது 350 கோடி ரூபாய் மானியம் கொடுத்தோம். அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றுவோம். ராசிபுரம் தொகுதியில், தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட 3 இடங்களில் மேம்பாலம், புறவழிச்சாலை அமைக்கப்பட்டது, ஏரிகள் தூர்வாரப்பட்டது, ஒன்றிய அலுவலகம் கட்டப்பட்டது. புதுப்பட்டி முதல் கெடமலை வரை, மற்றும் கீழூர் முதல் வடுகம் வரை இணைப்புச்சாலை அமைக்க 30.5 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் அந்த பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் விரைந்து செயல்படுத்தப்படும். கோணேரிப்பட்டி ஏரி மேம்படுத்தும் பணிகள் அதிமுக ஆட்சியில் பத்தரை கோடி நிதி ஒதுக்கப்பட்டது, அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் நிறைவேற்றபப்டும். ராசிபுரத்தில் பாதாள சாக்கடை திட்டம் 55 கோடி நிதி ஒதுக்கப்பட்டது, அதுவும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும். நிறைய கோரிக்கைகள் கொடுத்துள்ளீர்கள். அவை எல்லாம் பரிசீலித்து நிறைவேற்றப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் மீண்டும் வழங்கப்படும். அதிமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். தங்கமணி, சரோஜா, உள்ளிட்டோர் உங்களுக்காக உழைக்க காத்திருக்கிறார்கள், நான் அருகாமையில் இருக்கிறேன், நினைத்தால் 40 நிமிடத்தில் வீட்டுக்கு வந்துவிடலாம். இங்கிருக்கும் அமைச்சர் கூட ஸ்டாலினை பார்க்க முடியாது, ஆனால் நான் முதல்வராக இருந்தபோது சாதாரண தொண்டர் கூட என்னை சந்திக்கலாம். நம் பகுதிக்கு அருகில் இருக்கும் ஒருவர் ஆட்சி அமைத்தால் நிறைய திட்டம் வரும், நேரடியாக சந்திக்கும் வாய்ப்பும் அதிகம். ஆகவே அதிமுக கூட்டணி வெற்றி பெற ஆதரவை நல்க வேண்டும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்’’ என்று பலத்த கைதட்டலுக்கு இடையே பேச்சை முடித்தார். முன்னதாக எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பழைய பஸ் நிலையம் முன்பாக பூரண கும்ப மரியாதை, மற்றும் நிர்வாகிகள் சால்வை நினைவு பரிசு வழங்கினர். தொடர்ந்து மக்கள் வெள்ளத்தில் பொதுமக்களுக்கு கை அசைத்தபடி திறந்தவெளி வாகனத்தில் சென்றார்.. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் டாக்டர் வெ. சரோஜா பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நினைவு பரிசும், வேல் ஒன்றை வழங்கினார். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சியான பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி. ராமலிங்கம், மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.