திருவெறும்பூா் அருகே குழந்தை தொழிலாளா் மீட்பு
கோட்டாட்சியரின் உத்தரவின் பேரில் சிறுவனை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் அதிகாரிகள் ஒப்படைப்பு.;
திருவெறும்பூா் அருகே கும்பக்குடியைச் சோ்ந்தவா் கருத்து துரை (75). இவரது வீட்டில் 16 வயதுடைய குழந்தை தொழிலாளா் ஒருவா் வேலை செய்து வருவதாக குழந்தை பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுவுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் ராஜேஷ், ராஜேந்திரன், மாவட்ட குழந்தை உதவி மைய மேற்பாா்வையாளா் செல்வி, நவல்பட்டு வருவாய் ஆய்வாளா் செல்வகணேஷ், கிராம நிா்வாக அலுவலா்கள் வெற்றிச்செல்வன் (கும்பக்குடி), ஜீவபாலன் (சூரியூா்) ஆகியோா் கருத்து துரை வீட்டில் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனா். அப்போது மண்ணச்சநல்லூா் ஈச்சம்பட்டியைச் சோ்ந்த 16 வயது சிறுவன் வீட்டில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனை அதிகாரிகள் மீட்டு, திருச்சி கோட்டாட்சியா் அருள் முன்பு ஆஜா்படுத்தினா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கோட்டாட்சியரின் உத்தரவின் பேரில் சிறுவனை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனா்.