மனைவியின் நடத்தையில் சந்தேகம் : கைகுழந்தையை ரயிலில் வீசி கொன்ற கணவன் – ஆயுள் தண்டனை!
ரயிலில் இருந்து பெண் குழந்தையை தூக்கி வீசிய வழக்கு – கணவன் மாரிசெல்வத்துக்கு ஆயுள் சிறை தண்டனை.;
மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு பிறந்த பெண் குழந்தையை ரயிலில் இருந்து வீசி கொன்ற கணவனுக்கு கோவை மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. திருநெல்வேலி புதுக்குடியைச் சேர்ந்த மாரிசெல்வம் (30) என்பவர், கடையநல்லூரைச் சேர்ந்த கவிதா (22) என்பவரை திருமணம் செய்து கொண்டார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட அவர், 2022-ம் ஆண்டு திண்டுக்கல் அருகே ரயில் பயணத்தின் போது, கைக்குழந்தையை கவிதாவிடம் இருந்து பிடுங்கி ரயிலில் இருந்து தூக்கி வீசினார். பின்னர் கோவையில் மனைவியை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதை, கவிதா காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, மாரிசெல்வம் கைது செய்யப்பட்டார். குழந்தையின் உடல் மீட்கப்படாத நிலையிலும், ஆதாரங்களின் அடிப்படையில் நீதிபதி சுந்தர்ராஜ், குற்றவாளி மாரிசெல்வத்துக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பி. ஜிஷா ஆஜராகி வாதாடினார். குழந்தையின் உடல் இல்லாமலேயே தண்டனை வழங்கப்பட்ட கோவையின் அரிதான வழக்காக இது குறிப்பிடப்படுகிறது.