அ.தி.மு.க., , தி.மு.க., இரு தரப்பினர் பூஜை போட்டும் துவங்கப்படாத சாலைப்பணிகள்
குமாரபாளையம் அருகே அ.தி.மு.க., , தி.மு.க., இரு தரப்பினர் பூஜை போட்டும் சாலைப்பணிகள் துவங்கப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.;
குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி, காந்தி நகர் முதல் வீதியில் அதிக அளவிலான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து தினமும் வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி, பள்ளிக்கு செல்பவர்கள் உள்ளனர். வயதான நபர்களும் பலர் உள்ளனர். இந்த பகுதியில் உள்ள தார் சாலை முற்றிலும் பழுதாகி, பல்லாங்குழி போல் உள்ளது. இதில் டூவீலர்களில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த சாலையில் தினமும் சென்று வருவதால், பலருக்கு முதுகு வலி உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். நிலை தடுமாறி கீழே விழுந்து அடிபட்டு காயமடையும் நிலையும் தொடர்ந்து வருகிறது. அவசரமாக செல்வதானால் முடியாத ஒன்றாக உள்ளது. யாருக்காவது உடல்நிலை மோசமானால், ஆம்புலன்ஸ் கூட இந்த சாலை வழியாக வர முடியாது. ஊராட்சி தலைவர்கள் பதவி காலம் முடிந்ததால், அதிகாரிகள் வசம் இது குறித்து இப்பகுதி மக்கள் பலமுறை புகார் கொடுத்ததும் பலனில்லை. பி.டி.ஒ. உள்ளிட்ட அதிகாரிகள் புகார் வந்த பின் கூட வந்து பார்ப்பது இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்கள் இனியும் பொறுப்பது இல்லை, மேலும் சாலை புதிதாக அமைக்க தாமதம் செய்தால், பொதுமக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என்று கூறியுள்ள நிலையில், அக். 11ல், இந்த பகுதியில் புதிய தார் அமைக்க அ.தி.மு.க. சார்பிலும், தி.மு.க. சார்பிலும் பூஜை போடப்பட்டது. இப்பகுதி பொதுமக்களும் நிம்மதியடைந்தனர். இந்த நிம்மதி தற்போது நிலையில்லாமல் போனதுடன், பூஜை போட்டும் இரு தரப்பில் ஒருவர் கூட சாலைப் பணியை தொடங்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கிட்டதிட்ட 20 நாட்கள் ஆகியும் எப்போது சாலை பணிகள் துவங்கும் என ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்து உள்ளனர். மேலும் காலதாமதம் ஆனால், சாலையில் அமர்ந்து போராடுவது என முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.