பல்லக்காபாளையம் பிரிவில் மேம்பாலம், வேகத்தடை அமைக்க கோரிக்கை
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பிரிவில் மேம்பாலம், வேகத்தடை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை உள்ளது. அங்குள்ள தனியார் கல்லூரி தொடங்கும் முன்பும், நிறைவு பெறும் இடத்திலும் இரண்டு நான்கு சாலை சந்திப்புகள் உள்ளது. இந்த சாலைகளில் பல்லக்காபாளையம் பகுதியிலிருந்து வருபவர்கள், மேட்டுக்கடை பகுதியிலிருந்து வருபவர்கள், சாலையை நடந்தும், டூவீலர்களிலும் கடந்து செல்கிறார்கள். இங்குள்ள முனியப்பன் சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது என்பதால், அதிக அளவிலான பொதுமக்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள தனியார் கல்லூரிகள், அரசு பள்ளி, ஆகியவற்றிற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள், இந்த சாலையை கடந்துதான் வந்து செல்லும் நிலை உள்ளது. இங்குள்ள பல்லக்காபாளையம் வாரச்சந்தை பிரதி திங்கட்கிழமை கூடுகிறது. புகழ்பெற்ற இந்த சந்தையில் பொருட்கள் விற்க பல ஊர்களிலிருந்து வியாபாரிகள் வருகின்றனர். இந்த பகுதியை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களிலிருந்து பொதுமக்கள் இன்றத சாலையை கடந்துதான் சந்தைக்கு பொருட்கள் வாங்கி செல்ல வருகின்றனர். இவ்வாறாக அதிக அளவினான பொதுமக்கள் மாணாக்கர்கள் இந்த சாலையை கடக்கும் போது, அடிக்கடி விபத்துக்களில் சிக்கி உயிரிழந்து வரும் நிலை உள்ளது. இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும். தற்போது, உடனடியாக பக்கவாட்டு சாலை இணைப்புகளில் வேகத்தடை அமைத்து தொடர்ந்து நடந்து வரும் விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். காலம் தாழ்த்தாமல் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.