அரசு பள்ளி கழிப்பிடம் பணி தாமதம் மாணவர்கள் சாலை மறியல்
குமாரபாளையத்தில் அரசு பள்ளி கழிப்பிடம் கட்டுமான பணி தாமதத்தால் பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 24 வது வார்டு பகுதியான சுந்தரம் நகர் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவ மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இருந்த கழிவறையை எடுத்து விட்டு நவீன கழிவறை கட்டுவதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டது. அதன் பிறகு கட்டுமான பணிகள் தொடங்கி 15 மாதங்கள் கடந்தும் இதுவரை கழிவறை மாணவ மாணவிகள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படவில்லை. இதனால் பள்ளியின் வெளிப்புறப் பகுதியில் திறந்த வெளிகளில் கழிப்பறைகளை மாணவ மாணவிகள் பயன்படுத்தி வந்தனர். இதனால் சுற்றுப்புற சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மாணவ மாணவிகளுக்கு தொற்று நோய் ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் நகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்ட நவீன கழிப்பறையை திறந்து விட வலியுறுத்தி கடந்த மூன்று மாதங்களாக பெற்றோர் நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லாததால், நேற்று காலை திடீரென பள்ளிக்கு வந்த பெற்றோர் கழிவறை திறக்கப்படுமா திறக்கப்படாதா? என ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வகுப்பறையில் இருந்த தங்களுடைய குழந்தைகளை அழைத்துக் கொண்டு குமாரபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் திடீரென சாலை மறியல் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் ரமேஷ் மற்றும் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பெற்றோர் அதிகாரிகளுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சமரசத்தை ஏற்றுக் கொண்ட பெற்றோர் சாலை மறியலில் கைவிட்டு உடனடியாக கட்டி முடிக்கப்பட்ட நவீன கழிப்பறையை திறந்து வைக்க கோரிக்கை விடுத்தனர். அதற்கு நான்கு நாட்கள் அதிகாரிகள் கால அவகாசம் கேட்டுக் கொண்டதையடுத்து பெற்றோர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.