மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

குமாரபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது.;

Update: 2025-12-05 14:00 GMT
குமாரபாளையம் அடுத்துள்ள பல்லக்காபாளையம், தட்டாங்குட்டை, நேரு நகர் ,கோட்டைமேடு, வெப்படை, காந்திநகர், வாய்க்கால் மேடு, சின்னார் பாளையம், படைவீடு, அம்மாசி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சொந்த வீடு ,நிலம் இல்லாத 256 குடும்பங்களை சேர்ந்த விவசாய மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் வீட்டு மனை கேட்டு பலகட்ட போராட்டம் நடத்தியும் ,பல ஆண்டுகள் ஆகியும் வீட்டுமனை வழங்கப்படாத நிலை உள்ளது . இந்தியா சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் ஆகியும், படைவீடு உப்பு பாளையம் அருந்ததிய மக்களுக்கு சொந்த மயானம் இல்லாத நிலை உள்ளது .ஏற்கனவே உள்ள மயானம் நீதிமன்ற வழக்கில் உள்ளது. இதன் காரணமாக அந்த மயானத்தையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது . எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் அருந்ததியர் மக்களுக்கு சொந்த மயானத்தை உறுதிப்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. வடக்கு ஒன்றிய செயலாளர் சந்திரமதி தலைமை வகித்தார். மாவட்ட குழு செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரங்கசாமி ,அசோகன் ,முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் துரைசாமி, சி.பி.எம், நகர செயலர் சக்திவேல், நகர செயலர் கந்தசாமி உள்பட பலர் பங்கேற்று பேசினர். நேற்று காலை துவங்கி மாலை வரை இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில் குமாரபாளையம் தாசில்தார் பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள், போராட்டக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது அவர்கள் கூறும்போது குமாரபாளையம் வட்டத்தில் பல்வேறு பகுதியில் வசிக்கும் வீடோ நிலமோ இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து உரிய அனுமதி பெறப்பட்ட பிறகு வீட்டுனை பட்டா வழங்கப்படும்.மேலும் அருந்ததியர் மக்களுக்கு மயானம் குறித்தான பிரச்சனையில் உரிய தீர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.2026 ஜனவரி 20-ஆம் தேதிக்குள் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர் .இதனை ஏற்றுக் கொண்ட போராட்டக்காரர்கள் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்தனர் .

Similar News