ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரமன்றத்தில் கொந்தளிப்பு திருவள்ளுவர் சிலை இடமாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு
இந்தக் கூட்டத்தில், திருவள்ளுவர் சிலையை இடமாற்றம் செய்யும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக நகரமன்ற உறுப்பினர்கள் பொன். ராஜசேகர், கம்பி கண்ணன், தமிழ்செல்வி கோபு மற்றும் அதிமுக உறுப்பினர் உதயகுமார் ஆகியோர் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.;
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரமன்றத்தில் கொந்தளிப்பு திருவள்ளுவர் சிலை இடமாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு ஆற்காடு, டிச.31 : இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரமன்றக் கூட்டம், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு நகரமன்றத் தலைவர் தேவிபென்ஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன் மற்றும் நகரமன்ற ஆணையாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில், திருவள்ளுவர் சிலையை இடமாற்றம் செய்யும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக நகரமன்ற உறுப்பினர்கள் பொன். ராஜசேகர், கம்பி கண்ணன், தமிழ்செல்வி கோபு மற்றும் அதிமுக உறுப்பினர் உதயகுமார் ஆகியோர் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். பொன். ராஜசேகர்: தனது வார்டில் ரூ.35 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு பல மாதங்கள் ஆகியும், பணிகள் இன்னும் முடிவடையவில்லை. பணிகளை விரைந்து நிறைவு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பஜாரில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை இடமாற்றம் செய்யக் கூடாது என்றும், அவ்வாறு செய்தால் நகரமன்றத்திற்கும் சம்பந்தப்பட்ட கட்சிக்கும் கலங்கம் ஏற்படும் என தெரிவித்தார். நகரமன்ற மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்கள் உறுப்பினர்களுக்கு முறையாக வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனந்தன்: வீடுகளில் புகும் பாம்புகளை பிடிக்க வரும் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களிடம் கட்டாயமாக பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளதாகக் கூறி, இதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ரவி: தனது வார்டில் உள்ள கால்வாய்கள் (கல்வட்டுகள்) சீரமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார். குணாளன்: தனது வார்டில் உள்ள பூங்காவில் பன்றிகள் அதிகளவில் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. நகரமன்றத் தலைவர் மற்றும் ஆணையாளர் நேரில் ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். நகரமன்ற துணைத் தலைவர் பவளக்கொடி சரவணன்: அனைத்து வார்டுகளிலும் உள்ள சிறு குறைகளை விரைந்து சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, நகரமன்றத் தலைவர் வார்டு சபைக் கூட்டங்களில் பொதுமக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.