தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி இறந்தவரின் உறவினர்கள் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம்
சாலை மறியல்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே சிலமலை கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமணராஜா(34). இவருக்கு மஞ்சு என்ற மனைவியும் 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. லட்சுமண ராஜா இதே பகுதியில் ஜெராக்ஸ் கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை லட்சுமணராஜா திடீரென அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார். பின்னர் தகவலறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த லட்சுமண ராஜா உடலை இறக்கி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் சிலமலை அருகே உள்ள சூலப்புரம் கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் லட்சுமண ராஜாவை வந்து தாக்கியதாகவும், இதனால் மனமுடைந்த லட்சுமண ராஜா தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்கொலைக்கு காரணமானவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்யக்கோரி லட்சுமண ராஜாவின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் போடியில் இருந்து தேவாரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்தில் இருந்த போடி தாலுகா போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்ன சம்பவ இடத்திற்கு வந்த போடி டிஎஸ்பி பெரியசாமி தற்கொலை செய்து கொண்ட லட்சுமண ராஜாவின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்திய பின்பும் அவர்கள் சாலை மறியலை கைவிடவில்லை. இதைத் தொடர்ந்து ஏ டி எஸ் பி சுகுமார் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை, நடத்தியும் தற்கொலைக்கு காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என உத்தரவாதம் அளித்தும் சாலை மறியலை தற்கொலை செய்து கொண்ட லட்சுமண ராஜாவின் உறவினர்கள் கைவிடாமல் சாலையில் மர கிளைகள், விறகு கட்டுகளை போட்டு மறைத்தனர். இதனால் 10 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட நேரமாக அணிவகுத்து காத்திருந்தன. மேலும் சாலை மறியல் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டது. நிலையில் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தினார் இரவு 10 மணி வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு வீடு திரும்பினர். காவல்துறையின் பலத்த பாதுகாப்போடு வாகனங்கள் பகுதியில் இயங்கி வருகிறது. சாலை மறியலை கைவிட்டாலும் இறந்த லட்சுமண ராஜாவின் உடலை தற்போது வரை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையிடம் அவர்கள் ஒப்படைக்கவில்லை. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போடி தாலுகா போலீசார் லட்சுமண ராஜாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.