ரயில்வே கேட்டில் ஆட்டோ மோதியதில் சிக்னல் கோளாறு 10 நிமிடம் ரயில் தாமதம்
மயிலாடுதுறை அருகே நீடூரில் ரயில்வே கேட்டில் லோடு ஆட்டோ மோதியதில் கேட் மூடப்படாததால் ரயில்வரும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல்
. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை-மணல்மேடு வழித்தடத்தில் நீடூர் ரயில்வே கேட் உள்ளது. ரயில்கள் செல்லும் நேரத்தில் அடிக்கடி கேட் மூடப்படுவதால் எப்போதும் இங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென்று மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் பகுதியில் இருந்து மயிலாடுதுறைக்கு ரயில்வரும் நேரத்தில் கேட்டை ஊழியர் மூடும்போது கேட் மூடுவதற்குள் கடந்துவிடலாம் என்று அதிவேகமாக வந்த லோடு ஆட்டோ ரயில்வே கேட்டில் மோதி நின்றது இதனால் சிக்னல் கிடைக்காமல் கேட் மூட முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் 10 நிமிடத்திற்கு மேலாக ரயில் நிறுத்திவைக்கப்பட்டு காலதாமதமாக புறப்பட்டதோடு மயிலாடுதுறை-மணல்மேடு வழிதடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.