தந்தை, மகனை கத்தியால் குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

அரியலூர் அருகே தந்தை, மகனை கத்தியால் குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது;

Update: 2025-08-01 10:35 GMT
அரியலூர், ஆக 1. அரியலூர் மாவடடம், செந்துறை அருகே தந்தை, மகனை கத்தியால் குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, அரியலூர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.செந்துறை அடுத்த சன்னாசிநல்லூர் தெற்குத் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(71). வீரனார் கோயில் பூசாரியான இவருக்கும், அதே கிராமம், குள்ளன் காலனித் தெருவைச் சேர்ந்த பெருமாள்(57) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.கடந்த 28.7.2019 அன்று ராஜேந்திரனை, பெருமாள் தகாத வார்த்தையால் திட்டி, கத்தியால் குத்தியுள்ளார். ராஜேந்திரனை தகாத வார்த்தையால் திட்டி பெருமாள் தாக்கியுள்ளார். அதனை தடுக்க வந்த ராஜேந்திரன் மகன் தினேஷ்(24) வயிற்றிலும் அவர் கத்தியால் குத்தியுள்ளார். இதில் தினேஷ் குடல் வெளியேறி உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சிகிச்சையில் இருந்த தினேஷிடம் தளவாய் காவல் துறையினர் பெற்ற வாக்குமூலத்தை கொண்டு பெருமாளை கைது செய்து சிறையில் அடைத்து, அரியலூர் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மணிமேகலை, ராஜேந்திரனை கத்தியால் குத்தியமைக்கு 10 ஆண்டுகள், தினேஷை கத்தியால் குத்தியமைக்கு 10 ஆண்டுகள் என 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், அதனை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளி பெருமாள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News