நீலகிரி மாவட்டம் உதகையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது...
நீலகிரி மாவட்டம் உதகையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது...;
நீலகிரி மாவட்டம் உதகையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது... நீலகிரி மாவட்டம் உதகையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லையில் நீலகிரி மாவட்டம் உள்ளது. இதனால் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் பயன்பாடு நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்க்கு நீலகிரி மாவட்டம் வழியாக கஞ்சா உட்பட்ட போதைப் பொருட்கள் கடத்திச் செல்லப்படுகிறது. எனவே கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் கஞ்சா விற்பனை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருப்பது காவல்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. இதற்காக நீலகிரி மாவட்டத்தில் பழைய கஞ்சா குற்றவாளிகளை நேரில் சந்தித்து விசாரணை நடத்துவது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உதகை பேருந்து நிலையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் உதகை மேற்கு காவல் நிலையம் உதவி ஆய்வாளர்கள் ஹரிஹரன், நிஷாந்தி தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 1.100 கிலோகிராம் கஞ்சாவும், 100 கிராம் ஹைட்ரோபோனிக் கஞ்சாவும் இருந்தது. விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் காளம்பூலாவை சேர்ந்த அப்துல் வகாப் (34), காட்டேரி உலிக்கல் பகுதியை சேர்ந்த மெல்சர் பால் (35), உதகை வண்டிச்சோலையை சேர்ந்த சுஜன் (35) என்பதும், தொடர்ச்சியாக கஞ்சா விற்பனை ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது: வழக்கமான கஞ்சாவில் 3 முதல் 4 சதவீதம் இருக்கும் என்றால், ஹைட்ரோபோனிக் கஞ்சாவில் 30 முதல் 40 சதவீதம் இருக்கும். எம்டிஎம்ஏ போதை பொருளை போல விலை அதிகம் இருக்கக்கூடிய பொருள். ஹைட்ரோபோனிக் என்றால் மண் இல்லாமல், ரசாயன உணவு கொண்டு நீரில் வளரும் செடிகள் ஆகும். இவற்றை வீட்டிற்குள் வளர்க்கலாம். ஒரு கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா ஒரு கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.