பண்டிட் தீன் தயாள் உபாத்தியாயா வின் 109-வது பிறந்த நாள் இராசிபுரத்தில், பாஜக சார்பில், மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் மலர் தூவி மரியாதை..

பண்டிட் தீன் தயாள் உபாத்தியாயா வின் 109-வது பிறந்த நாள் இராசிபுரத்தில், பாஜக சார்பில், மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் மலர் தூவி மரியாதை..;

Update: 2025-09-25 16:09 GMT
அமெரிக்க வரிவிதிப்புக்கு உலக நாடுகள் மாற்றுவழி கண்டுபிடிக்காத நிலையில், பிரதமர் திரு. நரேந்திர மோடி, சாதுரியமான முடிவுகளை எடுத்து, சரக்கு - சேவை வரிகளை சீரமைத்துள்ளதன் மூலம் ஒட்டுமொத்த இந்திய மக்களும் பயனடைந்து வருகின்றனர் என்றும், சுயசார்பு இந்தியாவை கட்டமைப்பதில் பிரதமர் உறுதியாக உள்ளார் என்றும் நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் டாக்டர். K.P. இராமலிங்கம் (25.09.2025) பேடியின்போது கூறினார்*. பாரதிய ஜன சங்கத் தலைவர்களில் முதன்மையானவராக திகழ்ந்தவரும் சமூக செயற்பாட்டாளருமான பண்டிட் தீன் தயாள் உபாத்தியாயா வின் 109-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில், பாஜக சார்பில், அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர். K.P. இராமலிங்கம், (இன்று 25.09.2025), தீனதயாள் உபாத்தியாயா திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் உபாத்யாயாவின் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் டாக்டர். K.P. இராமலிங்கம், அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூறிய அவர், திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தை முதன்மை மாநிலமாக உயர்த்திருப்பதாக கட்சியினர் கூறி வருகின்றனர். இது முற்றிலும் பொய் என இப்போது, CAG , மத்திய தணிக்கையாளர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் 2013-14 முதல் 2022-23 நிதி ஆண்டுகளின் இடைப்பட்ட 10 ஆண்டுகளில், வருவாய் உபரி ஈட்டியது, பொருளாதார உயர்வு , நலத்திட்டங்கள் செயல்பாடு உள்ளிட்டவை குறித்தான அந்த ஆய்வறிக்கை முடிவில், இந்திய அளவில் உத்தரபிரதேச மாநிலம்தான் 37 ஆயிரம் கோடி ரூபாய் உபரி வருவாய் ஈட்டி முதன்மை மாநிலமாக உள்ளது. ஆனால் தமிழகம், 27-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கை கூறியுள்ளது. திமுக அரசு, தான் பெற்றுள்ள கடன் தொகையை வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் நிலையில் உள்ளது. மக்கள்மீது கடன் சுமையை சுமத்தி, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குகிறது. இந்த நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழகம் மிகப்பெரிய பொருளாதார சரிவை சந்திக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்பது CAG ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. எனவே, உண்மைக்கு மாறான தகவலை கூறாமல், தமிழக பொருளாதார நிலையை மேம்படுத்தும் பணியை முதல்வர் மேற்கொள்ள வேண்டும். 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து, தமிழகத்தை அப்படியே கடனில் தள்ளி விட்டு போகலாம் என திமுக நினைத்தாலும், பொதுமக்கள்மீது கடன் சுமத்தப்பட்டுள்ளதால், திமுக 166 பேரின் குடும்ப முதலீடுகள் எவ்வளவு? என்றும், ஆட்சிக்கு வருவதற்கு முன்பும் பின்பும் சொத்து விவரம் குறித்தும் மக்கள் கேள்வி கேட்பார்கள். எனவே, இதனை உணர்ந்து ஆட்சியாளர்கள் இதனை சரிப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் கூறிய K.P. இராமலிங்கம், பொதுமக்கள் நல்வாழ்வு பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, GST-ஐ சீரமைப்பு செய்துள்ளார். 2 கட்டங்களாக எளிமைப்படுத்தி, இந்திய வரலாற்றில் பொருளாதாரப் புரட்சியை நடத்திக் காட்டி உள்ளார். மேலும், பிரதமர், 2047-ல் வளர்ச்சி அடைந்த /சக்தி வாய்ந்த பாரதமாக உருவாக்குவதன் ஒரு பகுதியாகத்தான் நாட்டு மக்களை சுயசார்பு முறையில் முன்னேற்றி வருகிறார். அமெரிக்கா நமது பொருள்களுக்கு அதிக வரியை விதித்துள்ள நிலையில், இந்தியாவில் உற்பத்தி செய்து பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதில் பிரதமர் அதிக கவனம் செலுத்தி, நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறார். அமெரிக்க வரிவிதிப்புக்கு உலக நாடுகள் மாற்று வழி கண்டுபிடிக்காத நிலையில், பிரதமர் திரு. நரேந்திர மோடி, சாதுரியமான முடிவுகளை எடுத்து, சரக்கு-சேவை வரியை சீரமைத்துள்ளார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக இந்திய மக்கள் பயனடைந்து வரும் நிலையில், அதனுடைய பயன் நேரடியாக மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக, தமிழ்நாடு அரசு, பால்/ பால் பொருட்களின் விலையை இதுவரை குறைக்காமல் உள்ளது. மத்திய அரசு, சரக்கு-சேவை வரியை குறைத்த போதிலும், திமுக அரசு அதனை குறைக்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்? இதிலேயும் திமுக அரசியல் ஆதாயம் தேடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மத்திய அரசு குறைத்துள்ள GST வரி குறித்தும், மாநில அரசு இதுவரை குறைக்காமல் இருக்கிற GST குறித்தும், பொருட்கள் வாரியாக ஊடகங்கள் தெளிவான விளக்கங்களை பொதுமக்கள் மத்தியில் வெளியிட வேண்டும். சீரமைக்கப்பட்ட GST விலையில்தான் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதில் வியாபாரிகள் கவனம் செலுத்த வேண்டும். நாட்டு மக்களின் சுதேசி மனப்பான்மையை உருவாக்குவதற்காக GST வரி சீரமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற பொருளாதாரம் உயர்ந்தால்தான் நாடு பாதுகாக்கப்படும் என்ற மகாத்மா காந்தியடிகளின் அறைகூவலை, நிறைவேற்றி இருக்கிற மகத்தான மகாத்மா பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆவார். தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணத்திற்கு திமுக அரசு விதிக்கும் தடைகள் குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த K.P. இராமலிங்கம், பாஜக நிகழ்ச்சிகளுக்கு இதைவிட கடுமையான தடைகளை திமுக அரசு விதித்து வருகிறது. இதனை விஜய் தெரிந்துகொள்ள வேண்டும். அதிமுகவை அனுமதிக்கும் அளவுக்கு கூட பாஜகவிற்கு திமுக அரசு அனுமதி தரவில்லை. இந்த அரசு விதிக்கும் தடைகளால் யாரும் பின்வாங்க மாட்டார்கள். விஜய் அவருக்குரிய பிரச்சாரத்தை செய்யத்தான் செய்வார். பாஜகவை தமது கொள்கை எதிரி என கூறும் விஜய், திமுகவுக்கு ஆதரவாக இருக்கிறாரா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. பாஜகவின் கொள்கைகளை முதலில் விஜய் தெரிந்துகொள்ள வேண்டும். தேசம் காப்போம் தமிழகம் வெல்வோம் என்ற கொள்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தேசத்தில் இருக்கும் வெளிநாட்டு எதிரிகளை தக்க முறையில் தடுத்து நிறுத்தி, தீவிரவாத செயல்களை / வேறுவிதமான நடவடிக்கைகளை /தேசத்தை பாதிக்காத வகையில் அவர்களை சந்திக்கின்ற ஆற்றலோடு எங்களை நாங்கள் வலிமைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் போன்ற எந்த நாடுகளாக இருந்தாலும் அவற்றை நாங்கள் சந்திக்கிறோம். சுதந்திரத்திற்கு பிறகு பாகிஸ்தான் போர் வந்தபோதும் கூட, அன்றைய மத்திய அரசின் அழைப்பின் பேரில், காஷ்மீர் விமான நிலையத்தை RSS தொண்டர்கள்தான் மீட்டு, பாதுகாத்தார்கள் என்பது வரலாறு. தொடர்ந்து தேச பாதுகாப்புக்காக RSS, பாஜக போன்ற இயக்கங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. மகாத்மா காந்தி வழியில் வந்த காங்கிரஸ் கட்சி சுயசார்பு இந்தியாவை மறந்துவிட்ட இப்போதிலும் பாஜக இன்று அதனை முன்னிறுத்தி நாட்டை முன்னேற்றி வருகிறது. இந்தக் கொள்கையை விஜய் எதிர்க்கிறாரா? கிறிஸ்துவ ஆளுமை மிக்க ஐரோப்பிய நாடுகளில் இருந்து பொருட்களையும், சித்தாந்தங்களையும் இறக்குமதி செய்ய வேண்டும் என அவர் நினைக்கிறாரா? பாஜகவின் முன்னோடி கொள்கைகளை விஜய் எதிர்க்கிறாரா என விளக்க வேண்டும். 80 சதவீதம் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வரும் வட கிழக்கு மாநிலங்களில், பாஜக ஆட்சியில் உள்ளது. இந்துத்துவா கொள்கைக்கு எதிரியாக விஜய் தன்னை முன்னுறுத்துகிறாரா? திமுகவுக்கு எதிராக நடப்பதைப் போல காட்டிக் கொள்ளும் விஜய், அந்தக் கட்சிக்கு ஆதரவாக தான் இருக்கிறார். இந்துத்துவாவை பாஜக வலியுறுத்துவதால் எங்களை கொள்கை எதிரி என்று கூறுகிறார். ஏற்கனவே விஜய், தேசத்தை, கிறிஸ்தவ நாடாக மாற்ற வேண்டும் என பேசியுள்ளார். பாஜக, தமிழகத்தில் மேலும் அதிக உத்வேகத்தோடு செயல்படும் வகையில், புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். சேலம் பெருங்கோட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் நாளை (26.9.25) முதல் 3 நாட்களுக்கு ஒவ்வொரு வாக்கு சாவடியாக, வெளி மாவட்ட பாஜக நிர்வாகிகள் சென்று கட்சித் தொண்டர்களை ஊக்கப்படுத்துவார்கள். மேலும் மாநில தலைவரின் மாவட்ட வாரியான மாநாடுகள் மற்றும் 234 தொகுதிகளிலும் திமுக அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து, மிகப் பெருமளவிலான போராட்டங்கள் ஆகியவை நடத்தப்படும். அதிமுக தலைமை அலுவலகம் குறித்து சந்தேகம் எழுப்பும் உதயநிதி ஸ்டாலின், அவ்வை சண்முகம் சாலையில் MGR-ன் துணைவி ஜானகி அம்மாள் கொடுத்த கட்டடம்தான், தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருவதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். ஓ. பன்னீர்செல்வம் உள்ளே புகுந்து சென்ற அலுவலகம் யாருடைய அலுவலகம் என்று தன்னுடைய தந்தையான முதல்வரை கேட்டு உதயநிதி தெரிந்து கொள்ளட்டும். . தீவிர வாக்காளர் திருத்தம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே.பி. இராமலிங்கம், 2026 தேர்தலில் தெரியவரும் அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல, திமுக ஒவ்வொரு தேர்தலுக்கு பின்பும் ஒரு அறிக்கை விட்டு, வாக்கு சீட்டு ஏமாற்றம், போலி வாக்காளர், வாக்குப் பதிவில் முறைகேடு, வாக்குசாடி கைப்பற்றல் என பல காரணங்களை கூறுவார்கள். தாங்கள் ஆட்சிக்கு வந்தபோது இதனை ஏன் திமுக கூறவில்லை? வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்கு ஏன் திமுக பயப்பட வேண்டும். தமிழகம் முதன்மை மாநிலம், முதன்மை அமைச்சர் என்பதெல்லாம் இன்று CAG ஆய்வு அறிக்கை முடிவால் பொய்யாகிவிட்டது. முதல்வர், வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கவில்லை என்றும் இராசிபுரத்தில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் டாக்டர். கே.பி. இராமலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் சேதுராமன், ராசிபுரம் நகரத் தலைவர் வேலு, வழக்கறிஞர் இளங்கோ, மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News