கனமழை மற்றும் பலத்த சூறை காற்றால் ரூ.15 லட்சம் மதிப்பிலான செவ்வாழை மரங்கள் ஒடிந்து சேதம்
சிங்கம்புணரி அருகே எஸ்புதுார் இரணிப்பட்டியி்ல் கனமழை மற்றும் பலத்த சூறை காற்றால் ரூ.15 லட்சம் மதிப்பிலான 2000 செவ்வாழை மரங்கள் ஒடிந்து சேதம் - விவசாயி அழுது புலம்பிய காட்சி பார்ப்பவர்கள் நெஞ்சை கலங்கியது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் ஒன்றியம் இரணிபட்டியில் வசித்து வருபவர் அப்துல் காதர். மாற்றுத்திறனாளியான அப்துல் காதர் தனது விவசாய ஆர்வத்தின் காரணமாக அந்தப் பகுதியில் விலை மதிப்புமிக்க வாழை மரங்களை பயிரிட்டு விவசாயம் செய்து வந்ததாக தெரிகிறது. இவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீரிய ரகமான 2600 செவ்வாழை பயிர் நாற்றுகளை கேரளாவில் இருந்து வரவழைத்து பயிர் செய்ததாக கூறப்படுகிறது. செவ்வாழை பயிர்கள் நடவு செய்து 10 மாதங்களாக இரவை பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சி, அடி உரம் மேலூரம் இட்டு பயிர்களை தரமான முறையில் பாதுகாத்து வந்துள்ளார். இந்த நிலையில் 2000 வாழைகளுக்கு தேவையான பண தேவைக்காக ரூபாய் 7,00,000 தனியாரிடம் கடன் வாங்கி செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை சிங்கம்புணரி பகுதியில் வீசிய பலத்த சூறைக்காற்று மற்றும் கனமழையின் காரணமாக 2000க்கும் மேற்பட்ட செவ்வாழை மரங்கள் ஒடிந்து விழுந்து நாசமானதாக கூறப்படுகிறது. இன்று காலை வழக்கம் போல தோட்டத்துக்கு சென்ற அப்துல் காதர் தோட்டம் முழுவதும் வாழைப்பயிர்கள் ஒடிந்து விழுந்து நாசமாகி உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்து அழுது புலம்பினார். அறுவடை செய்து வாங்கிய கடன் 7 லட்சத்தை அடைத்து விடலாம் என்று நம்பிக்கையின் வாழ்ந்து வந்த அப்துல் காதர் மிகுந்த மன அழுத்தத்துடன் மனமுடிந்து பயிர்கள் நாசமானதை கண்டு மனம் முடிந்து அழுது புலம்புகிறார். பலத்த சூறைக்காற்றால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அவருக்கு அரசு உதவி செய்ய வேண்டுமென பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.