சேலம் மாவட்டத்தில் 15 ஏரிகளில் மீன்வளத்துறை சார்பில் 4 லட்சம் மீன் குஞ்சுகள் விடும் பணி
அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.;
சேலம் மாவட்டத்தில் மீன்வளத்துறையின் சார்பில் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள நைனாத்தாள் ஏரியில் 20 ஆயிரம் நாட்டின மீன் குஞ்சுகளை இருப்பு வைக்கும் பணி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலை வகித்தார். இந்த பணியை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்து கூறியதாவது:- சேலம், ஓமலூர், தாரமங்கலம், வீரபாண்டி மற்றும் அயோத்தியாப்பட்டணம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள நைனாத்தாள் ஏரி, சின்ன ஏரி, எம்.செட்டிபட்டி ஏரி, மூங்கில் ஏரி, மாங்குப்பை ஏரி, சின்னேரிப்பட்டி ஏரி, அமரகுந்தி புது ஏரி, மல்லமூப்பம்பட்டி ஏரி, சேலத்தாம்பட்டி ஏரி, தளவாய்ப்பட்டி ஏரி, காட்டேரி, புத்தூர் ஏரி, கொப்பம் ஏரி, எஸ்.பாப்பாரப்பட்டி ஏரி மற்றும் தொட்டில் ஏரி ஆகிய 15 ஏரிகளில் 4 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன. நாட்டின மீன்வளத்தை பாதுகாக்க அரசு மீன்குஞ்சு உற்பத்தி நிலையங்களில் தூண்டுதல் முறையில் இனப்பெருக்கம் செய்து மீன்குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்யப்படுகிறது. நாட்டின தாய் மீன்களில் இருந்து மீன்குஞ்சுகளை உற்பத்தி செய்யும்போது பிழைப்புத்திறன் வெகுவாக அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.