கோவை: ரயில் நிலையத்தில் 16 கிலோ கஞ்சா பறிமுதல் !
கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஒட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வெளியூரில், வெளி மாநிலங்களுக்கு அதிக அளவில் பயணிகள் பேருந்துகள், ரயில்கள் மூலம் பயணம் செய்கின்றனர். இதனைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக கடத்தல் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சோதனை நடத்தி வந்தனர். அப்பொழுது பாட்னாவில் இருந்து எர்ணாகுளம் சென்ற ரயிலை சோதனை செய்தபோது பின்பக்கம் உள்ள பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனர். அதில் 16 கிலோ கஞ்சா இருந்தது. அதனை கைப்பற்றிய ரயில்வே காவல் துறையினர், போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.