சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய பெண் ஒருவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். மேலும் அவர் வீட்டில் டியூசன் நடத்தி வருகிறார். இங்கு வீராணம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவி உள்பட 5-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வந்தனர். இதில் கடந்த 2 மாதங்களாக அந்த மாணவி டியூசனுக்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டைவிட்டு வெளியே சென்ற ஆசிரியை வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் ஆசிரியை மாயம் குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஆசிரியை மாயமாவதற்கு முன்பு தனது செல்போனில் இருந்து டீயூசனுக்கு வந்த வீராணம் பகுதியை சேர்ந்த மாணவிக்கு பேசியது தெரியவந்தது. இதனிடையே அந்த மாணவியும் அதே நேரத்தில் மாயமாகி உள்ளார். இதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து மாயமாகி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி மாயமானது குறித்து அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.