திருவையாறில் ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 178வது ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி ஆயிரக்கணக்கானோர் இசையஞ்சலி
இசை விழா
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி கரையில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகள், பகுலபஞ்சமி தினத்தில் முக்தி அடைந்தார். அங்கு, ஆண்டுதோறும், பகுலபஞ்சமி தினத்தில் ஆராதனை விழா ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. இந்தாண்டு, தியாகராஜ சுவாமிகளின் 178வது ஆராதனை விழா, கடந்த ஜன.14ம் தேதி துவங்கியது. நாள்தோறும் காலை 9:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை, இசை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிழ்வான நேற்று அதிகாலை, தியாகராஜ சுவாமி வாழ்ந்த வீட்டில் இருந்து, உஞ்சவிருத்தி பஜனை புறப்பட்டாகி, மேள தாளங்கள் முழங்க, வீதியுலவாக அவரின் சன்னதிக்கு வந்தனர். பிறகு, நாதஸ்வரம் நிகழ்ச்சியும், பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை துவங்கியது. இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சுதா ரகுநாதன், மஹதி, கடலுார் ஜனனி, ஓ.எஸ்.அருண், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் உள்ளிட்ட கர்நாடக சங்கீத இசை கலைஞர்கள் என ஆயிரக்கணக்கனோர், நாட்டை, கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீராகம் என பஞ்ச ரகங்களில் ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீசத்குரு தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். அப்போது, ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளுக்கு சந்தனம், மஞ்சள்,குங்குமம் உள்ளிட்ட பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் நடந்தது. விழா இரவு 11:20 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் நிறைவு பெற்றது. பஞ்சரத்ன கீர்த்தனை இசையஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, சுதா ரகுநாதன், மஹதி, ஜனனி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: தியாகராஜர் ஆராதனை இசையஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மனசுக்கு நிறைவான விஷயம், திருவையாறு ஆராதனை விழாவில் கலந்து கொள்வதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன். இந்த புண்ணிய பூமியில் பாடியது மகிழ்ச்சியாக உள்ளது. ஐந்து ரகங்களை ஒருமித்த குரலில் ஆயிரக்கணக்கானோர் பாடுவது என்பது கடவுளின் கிருபை தான் இவ்வாறு தெரிவித்தனர்.