மின்வாரிய முகாமில் 1,976 மனுக்களுக்கு உடனடி தீர்வு
மின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, மின்வாரியம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில், பெறப்பட்ட 11,022 மனுக்களில் 1,976 மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டது.;

மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்களின் மின் கட்டணத் தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தமிழகம் முழுவதும் நேற்று ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் உள்ள 178 செயற்பொறியாளர் அலுவலகங்களில் நடைபெற்ற இந்த முகாமில், மொத்தம் 11,022 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மின்கட்டண குறைபாடு தொடர்பாகப் பெறப்பட்ட 1,394 மனுக்களில் 675 மனுக்களுக்கும், மின்மீட்டர் குறைபாடு தொடர்பாக பெறப்பட்ட 371 மனுக்களில் 203 மனுக்களுக்கும், சேதமடைந்த மின் கம்பங்கள் தொடர்பாக பெறப்பட்ட 2,278 மனுக்களில் 18 மனுக்களுக்கும், குறைந்த மின்னழுத்தம் தொடர்பாக பெறப்பட்ட 1,532 மனுக்களில் 12 மனுக்களுக்கும், பெயர் மாற்றம் உள்ளிட்ட மற்ற புகார்கள் தொடர்பாக பெறப்பட்ட 5,547 மனுக்களில் 1,068 மனுக்களுக்கும் நேற்றே தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள பழுதான மின் மீட்டர்கள் 2 அல்லது 3 நாட்களுக்குள்ளும், மின் கட்டணம் தொடர்பான புகார்களுக்கு ஒருவார காலத்துக்குள்ளும், பழுதான மின்கம்பங்கள் 15 நாட்களுக்குள் மாற்றப்படும். மேலும் மின்னழுத்த குறைபாடு போன்ற புகார்களின் மீது உரிய மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டு குறித்த காலத்துக்குள் சரி செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. சென்னையில், வள்ளுவர் கோட்டம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை மின்வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து முகாமில் கலந்து கொண்ட மனுதாரர்களின் கோரிக்கையைக் கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்கும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.