திருப்பதி நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
திருப்பதி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலத்தைச் சேர்ந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சேலம் மாவட்டம் மேச்சேரி கிராமம், தாசனூரைச் சேர்ந்த மல்லிகா( 55) நேற்று (ஜன.8) ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்புக்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்துக்கான நுழைவுச்சீட்டை வாங்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தத் துயரமான செய்தியை அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் உடனடியாகத் தெரிவித்துக் கொண்டதுடன், உயிரிழந்த மல்லிகாவின் உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த மல்லிகாவின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.