பரமத்திவேலூர் அருகே பள்ளி வேனில் சிக்கி 2 வயது குழந்தை பலி.

பரமத்திவேலூர் அருகே பள்ளி வேனில் சிக்கி 2 வயது தாய் கண்முன்னே பரிதாபமாக  குழந்தை பலி.;

Update: 2025-04-12 13:27 GMT
பரமத்திவேலூர், ஏப்.12- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள  கரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்கள் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை, அண்ணாநகரில் தங்கி அங்குள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான செங்கல் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஆத்விக் (வயது4) வெற்றிமிதுன் (2) என்ற இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். ஆத்விக் கீரம்பூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி படித்து வருகிறான்.   நேற்று மாலை பள்ளி வாகனத்தில் வந்த ஆத்விக்கை தாயார் பிரியதர்ஷினி அழைத்துவர சென்றார். அப்போது அவருடைய குழந்தை வெற்றி மிதுன் வீட்டில் விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது. பள்ளி வேன் ஆத்விக்கை இறக்கிவிட வீட்டிற்கு அருகே வந்தது. அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை வெற்றி மிதுன் எதிர்பாராத விதமாக வெளியே ஓடி வந்ததில் பள்ளியின் வேன் சக்கரத்தில் சிக்கிக் கொண்டதை யாரும் கவனிக்கவில்லை.  இந்த நிலையில் ஆத்விக் வேனில் இருந்து இறங்கியதும் அங்கிருந்து வேன் செல்ல முயன்றது. அப்போது வெற்றி மிதுன் மீது பள்ளி வேன் ஏறி சென்றது. இதனை அவருடைய தாய் பிரியதர்ஷினி பார்த்து கூச்சலிட்டார். அவருடயை அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதையடுத்து அவர்கள் பள்ளி வேனில் சிக்கிய குழந்தையை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை வெற்றி மிதுன் இறந்து விட்டதாக தெரிவித் துள்ளனர்.   இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஜேடர்பாளையம் போலீசார் குழந்தை வெற்றி மிதுனின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி வேன் டிரைவர். ஜேடர்பாளையத்தை சேர்ந்த ராமலிங்கம் (45) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வேனில் சிக்கி குழந்தை தாய் கண் முன்னே பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News