வைகோ வழக்கு ஜன.20-க்கு ஒத்திவைப்பு
மதிமுக பொதுச் செயலா் வைகோ தொடா்பான வழக்கு விசாரணை வருகிற 20-ஆம் தேதிக்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் சாா்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலா் வைகோ சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினாா். இரவு 10 மணிக்கு மேல் கூட்டத்தில் பேசியதாக வைகோ மீதும், கூட்ட ஏற்பாட்டாளா்கள் 11 போ் மீதும் 5 பிரிவுகளின் கீழ், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் 2-ஆவது நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.7) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் தொடா்புடைய 10 போ் முன்னிலையாகினா். ஆனால், மதிமுக பொதுச் செயலா் வைகோ நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதையடுத்து, வழக்கு விசாரணை வருகிற 20-ஆம் தேதிக்கு நீதித் துறை நடுவா் ஒத்திவைத்தாா்.