ஆண்டிபட்டி அருகே 2000 ஆண்டுகளுக்கு முன் உள்ள பழமையான பொருட்கள் கண்டெடுப்பு
சண்முகசுந்தரபுரத்தில் பழமையான பொருட்கள் கண்டுபிடிப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சண்முகசுந்தரபுரம், புழுதிமேடு பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் 2000 ஆண்டுகள் பழமையான பொருட்களை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.போடி சி.பி.ஏ., கல்லூரி பேராசிரியர் மாணிக்கராஜ், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம் இணைந்து சண்முகசுந்தரபுரம், பழுதிமேடு பகுதிகளில் மேற்பரப்பாய்வு செய்தனர்.அடர்த்தியான மண் ஓடுகள், வட்டச்சில்லுகள், அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய மண்பானை ஓடுகள், கூரை ஓடுகள், சுடுமண் குழாய்கள், உடைந்த சுடுமண் கிண்டி மூக்குகள், சுடுமண் காதணிகள் ஆகியவற்றை கண்டறிந்தனர்.இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது: இப்பகுதியில் கிடைத்த பொருட்கள் 2000 ஆண்டுகள் பழமையானது என தெரிந்தது. நீர் வளமும், மண் செழிப்பும் நிறைந்த இப்பகுதிகளில் பழங்காலத்தில் ஊர் இருந்திருக்க வேண்டும். 9 அல்லது 10ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை ஒன்றும், அருகில் சிதைந்த நிலையில் 12, 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கோயிலும், அங்கிருந்து எடுக்கப்பட்ட விநாயகர் சிலை, உடைந்த முருகன் சிலையும் கல்வெட்டும் உள்ளன.இது போன்ற எச்சங்களின் மூலம் பல்வேறு காலகட்டங்களில் மக்கள் இப்பகுதியில் வாழ்ந்திருப்பதை அறிய முடிகிறது. தமிழக அரசும், தொல்லியல் துறையும் இப்பகுதிகளை அகழாய்வு செய்தால் பழமை தெரிய வரும் என்றனர்.