தஞ்சாவூர் பெரியகோயிலில் மகா நந்திகேசுவரருக்கு 2,000 கிலோ காய்கனிகளால் அலங்காரம் : 108 கோ பூஜை
பக்தி
மகர சங்கராந்தி பெருவிழாவையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்கு ஏறத்தாழ 2 ஆயிரம் கிலோ எடையுடைய காய்கனிகள், இனிப்பு வகைகளால் புதன்கிழமை அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 108 கோ பூஜை நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, இக்கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்குச் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பின்னர், மகா நந்திகேசுவரருக்கு புதன்கிழமை காலை உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், முட்டைக்கோஸ், பூசணிக்காய், வாழைக்காய், பாகற்காய், கேரட், சௌசௌ, முள்ளங்கி நெல்லிக்காய், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்களாலும், ஆரஞ்சு, வாழை, ஆப்பிள், மாதுளை, கொய்யா, அன்னாசி போன்ற பழ வகைகளாலும், முறுக்கு, அதிரசம், ஜிலேபி, பாதுஷா போன்ற இனிப்புகளாலும், மல்லிகை, செவ்வந்தி, ரோஜா போன்ற பூ வகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த எடை ஏறத்தாழ 2 ஆயிரம் கிலோ ஆகும். தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. மேலும், மகா நந்திகேசுவரர் முன் 108 கோ பூஜை நடைபெற்றது. இதில் 108 பசு மாடுகள் கொண்டு வரப்பட்டு, அவற்றுக்கு சந்தனம், குங்குமப் பொட்டுகள் வைத்து, மாலைகள், வேட்டி, துண்டு அணிவிக்கப்பட்டன. மேலும், பசுக்களுக்கு வழிபாடு செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கோ.கவிதா, கோயில் செயல் அலுவலர் மணிகண்டன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.