கொல்லிமலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் வல்வில் ஓரி விழா- 2024 இன்று தொடங்கியது! -ஆடி 18 நாளை சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மற்றும் மலர்க்கண்காட்சி விழா பசுமை திருவிழாவாக மிகச்சிறப்பாக நடத்தப்பட உள்ளது. கொல்லிமலை செல்லும் 3 மலைப்பாதை வழிகளான காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, வேலிக்காடு ஆகிய இடங்களில் வனத்துறை மற்றும் காவல் துறையினரால் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியில் சங்க காலத்தில் புகழ்பெற்ற கடையேழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தினையும், கொடைத்தன்மையினையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 17 மற்றும் 18 ஆகிய நாள்களில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டும் கொல்லிமலையில் இன்று 02.08.2024 (வெள்ளிக்கிழமை), மற்றும், நாளை 03.08.2024 (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் வல்வில் ஓரி விழா – 2024 தமிழ்நாடு அரசின் சார்பில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. வல்வில் ஓரி விழாவையொட்டி மலர் கண்காட்சி, அரசு துறைகளின் பணி விளக்க முகாம் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை நடைபெற உள்ளன. இந்த ஆண்டு கொல்லிமலையில் கொண்டாடப்படவுள்ள வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மற்றும் மலர்க்கண்காட்சி விழா பசுமை திருவிழாவாக மிகச்சிறப்பாக நடத்தப்பட உள்ளது. கொல்லிமலை செல்லும் 3 மலைப்பாதை வழிகளான காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, வேலிக்காடு ஆகிய இடங்களில் வனத்துறை மற்றும் காவல் துறையினரால் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.இந்த ஆய்வின்போது வாகனங்களில் கொண்டுவரப்படும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே சுற்றுலா பயணிகள் எக்காரணம் கொண்டும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்களை கொண்டுவர வேண்டாம். சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் நெகிழி குடிநீர் பாட்டில்களை மட்டும் சேகரிக்க ஆங்காங்கே தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மட்டுமே பயன்படுத்திய குடிநீர் பாட்டில்களை போடவேண்டும். கடைகளில் ஒருமுறை பயன்டுத்தும் நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அபராதம் விதிக்கப்படும். எனவே கடை உரிமையாளர்கள் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்களை வைத்திருக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது எனவும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவிக்கு செல்ல தற்காலிகத் தடை கொல்லிமலையில் இன்றும் நாளையும் வல்வில் ஓரி விழா நடைபெறுவதை ஒட்டி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சுற்றுலாப்பயணிகளின் நலன் கருதியும் அருவிகளுக்கு செல்லத் தடை விதித்துள்ளது வனத்துறை.