மாவட்ட அளவிலான வங்கியாளர் கூட்டத்தில் 2025-26-ம் நிதியாண்டிற்கான ரூ.19425.99 கோடி மதிப்பிலான கடன் திட்ட அறிக்கையினை ஆட்சித்தலைவர் வெளியிட்டார்
மாவட்ட அளவிலான வங்கியாளர் கூட்டத்தில் 2025-26-ம் நிதியாண்டிற்கான ரூ.19425.99 கோடி மதிப்பிலான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள்.;
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான வங்கி மேலாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தின் 2025-26 ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வெளியிடப்பட்டது நபார்டு வங்கி வருடந்தோறும் வளம் சார்ந்த கடன் திட்டத்தை தயாரித்து வெளியிட்டு வருகிறது. அதன்படி முன்னுரிமை துறைகளுக்கு 2025-26ஆம் ஆண்டில், ரூபாய் 19425.99 கோடி அளவுக்கு வங்கிக் கடன் அளவிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஊரக மற்றும் வேளாண் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் நபார்டு வங்கி, விருதுநகர் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் வரும் நிதியாண்டில் ரூபாய் 19425.99 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் 2025-26ஆம் ஆண்டில் வேளாண்மைக்கு ரூபாய் 9998.59 கோடியாகவும், நுண், சிறு மற்றும் குறு தொழில்களுக்கான கடன் ரூபாய் 7918.08 கோடியாகவும், பிற முன்னுரிமை துறைகளுக்கு (ஏற்றுமதி, கல்வி, வீடு சுட்டுதல் மற்றும் மீள்சக்தி) ரூபாய் 1509.32 கோடியாகவும் என மொத்தம் ரூ.19425.99 கோடி அளவிற்கு மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று வெளியிட்டார்