சேலம் வழியாக சென்ற ரெயிலில் கேட்பாரற்று கிடந்த 26 கிலோ கஞ்சா பறிமுதல்
போலீசார் நடவடிக்கை;
வட மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக ரெயில்வே போலீசார் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அய்யாதுரை மற்றும் போலீசார் நேற்று காலை 8 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்த ஹவுரா-எர்ணாகுளம் சென்ற அனத்யோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சோதனை செய்தனர். அப்போது, 3-வது பெட்டியில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று 3 பேக்குகள் இருந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து பார்த்தபோது, அதற்குள் 26 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவற்றை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. வட மாநிலங்களில் இருந்து ரெயிலில் கஞ்சாவை கடத்தி வந்த மர்ம நபர்கள், போலீசாரை கண்டதும் அவற்றை இருக்கைக்கு அடியில் போட்டுவிட்டு நைசாக கீழே இறங்கி தப்பிஓடியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் கஞ்சாவை கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.