மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நல சங்கம் டிசம்பர் 3 இயக்கத்தினர் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை
பட்டை நாமம் அணிந்து போராட்டம்
மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நல சங்கம் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் மாவட்ட தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் அமரேசன், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள், மாற்றுத்திறனாளிகள் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வமணி அவர்களை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- மாற்றுத்திறனாளிகள் இலவச பட்டா மனைக்கு மனு கொடுத்தும் இதுவரை வழங்கப்படவில்லை. பட்டா கொடுத்தவர்களுக்கு இடத்தை அளந்து தரவில்லை. மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கு மனுக்கள் கொடுத்தும் தள்ளுபடி செய்கிறார்கள். சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய விசாரணை நடத்தி 40 முதல் 60 சதவீதம் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கிட வேண்டும். விருத்தாசலத்தில் தேசிய அடையாள அட்டை வழங்க மாதந்தோறும் மூன்றாவது புதன்கிழமை முகாம் நடைபெறுகிறது. முகாம் நடைபெறும் இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. உரிய டாக்டர்கள் வரவில்லை. இந்த முகாமில் உரிய வசதிகளை செய்து கொடுத்து தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாமை சிறப்பாக நடத்திட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் நீல வண்ண அட்டை மற்றும் முழு ஊதியம், தனி வேலை பதிவேடு வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு பணித்தள பொறுப்பாளர் பதவி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வமணி உடன் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனை ஏற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.