சென்னை: ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்களை கள்ளச் சந்தையில் விற்ற 3 பேர் கைது
கொல்கத்தா - சென்னை அணிகள் இடையே நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.;

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கான டிக்கெட்களை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, திருவல்லிக்கேணி போலீஸார் சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேப்பாக்கம் மைதானம் அருகே, ஐபிஎல் டிக்கெட்களை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த காஞ்சிபுரத்தை சேர்ந்த ராஜா (53), திருவல்லிக்கேணி செந்தில் குமார் (32), சேப்பாக்கம் மணி ரத்னம் (28) ஆகிய 3 பேரை கைது செய்தனர், அவர்களிடம் இருந்து 11 டிக்கெட்களை பறிமுதல் செய்தனர்.