அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் மீதான சிபிஐ வழக்கு: ரூ.30 லட்சம் அபராதம் விதித்து ஐகோர்ட் ரத்து
சிபிஐக்கு ரூ.15 லட்சம் அபராதமும், தமிழ்நாடு சமரச தீர்வு மையத்திற்கு ரூ.15 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடனும் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;
கடந்த 2013-ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிருந்து பெற்ற 30 கோடி ரூபாய் கடனை சகோதர நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டதால், 22 கோடியே 48 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் இயக்குநராக உள்ள நிறுவனத்துக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது 2021-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை மேற்கொண்டது. இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறை சார்பில், சிபிஐ வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளதால், சிபிஐ வழக்கை ரத்து செய்யக்கோரும் வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.