சேலம் அஸ்தம்பட்டி மண்டலம் 30-வது வார்டில் வளர்ச்சி திட்டப்பணிகள்
ஆணையாளர் இளங்கோவன் ஆய்வு;
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் 30-வது வார்டு செவ்வாய்பேட்டை மாணிக்கம் தெரு, அப்பு செட்டி தெரு, கோட்டை பிரதான சாலை, தாண்டவராயன் தெரு, அச்சு ராமன் தெரு, பங்களா தெரு பகுதிகளில் அங்கன்வாடி மையங்கள், பொது உடற்பயிற்சி மையம், கழிவுநீர் கால்வாய், வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து அவர், அப்பு செட்டி தெருவில் துப்புரவு ஆய்வாளர் அலுவலகம் மற்றும் கணினி வசூல் மையம் ஆகியவை இயங்கி வரும் பழைய மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்து அதனை பராமரித்து மீண்டும் மருத்துவமனையாக மாற்றி அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இக்கட்டிடத்தில் தற்போது இயங்கி வரும் துப்புரவு ஆய்வாளர் அலுவலகம், கணினி வசூல் மையம் ஆகியவற்றை இதே வார்டில் சாய்பாபா தெருவில் ரூ.60 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள துப்புரவு ஆய்வாளர் அலுவலக கட்டிடத்திற்கு மாற்றி செயல்படுத்த ஆணையாளர் உத்தரவிட்டார். கோட்டை பிரதான சாலை தாண்டவராயன் தெரு, அச்சு ராமன் தெரு, பங்களா தெரு, சாய்பாபா தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலையை ஆய்வு செய்து இந்த சாலையை உடனடியாக சீரமைக்க பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.