ஆசிரியை வீட்டில் ரூ.3.50 லட்சம் பணம் கொள்ளை... தஞ்சையில் பரபரப்பு
தஞ்சாவூர் கீழவஸ்தாசாவடி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட். இவர் பூதலூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.;
தஞ்சாவூர், டிச. 8- தஞ்சாவூர் அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து ரூ.3.50 லட்சம் மற்றும் வெள்ளிப் பொருட்கள், லேப்டாப் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் கீழவஸ்தாசாவடி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட். இவர் பூதலூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கஜலட்சுமி (52). இவர்பூண்டி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி கஜலட்சுமி வீட்டை பூட்டிக் கொண்டு தனது குடும்பத்தினருடன் டெல்லியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்காக புறப்பட்டு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் 7ம் தேதி வீட்டு பின்பக்க கதவு திறந்து கிடப்பதாக கஜலட்சுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் செல்போனில் அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கஜலட்சுமி தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் வசிக்கும் தனது உறவினர் ராம்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ராம்குமார் கஜலட்சுமியின் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.3.50 லட்சம் மற்றும் 500 கிராம் வெள்ளிப் பொருட்கள், லேப்டாப் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து தாலுகா போலீசுக்கு ராம்குமார் தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாயிருந்த காட்சிகளை கொண்டு விசாரணை நடந்து வருகிறது.