நாமக்கல்லில் வருகிற செப்டம்பர் 4இல் டோல்கேட் முற்றுகை போராட்டம்! -மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்லராஜாமணி அறிவிப்பு

தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற செப்டம்பர் 4ம் தேதி புதன்கிழமை பகல் 11 மணிக்கு, நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கீரம்பூரில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மணல் லாரி உரிமையாளர்களின் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

Update: 2024-08-31 14:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை திறந்து பொதுமக்களுக்கு மணல் வழங்கக்கோரி வருகிற செப்டம்பர் 4ம் தேதி நாமக்கல்- கீரம்பூர் சுங்கக்சாவடியை மணல் லாரி உரிமையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். நாமக்கல்லில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செல்லராஜாமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது...தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஏற்கனவே அரசு மணல் குவாரிகள் இயங்கி வந்தன. இந்த குவாரிகளில் மணல் கிடங்குகள் ஏற்படுத்தப்பட்டு, கான்ட்ராக்டர்கள் மூலம் லாரிகளுக்கு மணல் வழங்கப்பட்டது. மணல் காண்ட்ராக்டர்கள் மணல் விற்பனையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில், பல மணல் குவாரிகளில் மத்திய அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். இதில் கண்டுபிடிக்கப்பட்ட முறைகேடு சம்மந்தமாக அமலாக்கத்துறை மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை சோதனை முடிவடைந்த நிலையில், தமிழக அரசு கடந்த 7 மாதங்களாக தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை தொடர்ந்த நடத்தாமல் மூடி வைத்துள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகளுக்கு மணல் கிடைக்கவில்லை. இதைப் பயன்படுத்தி தனியார் எம்.சேண்ட் உரிமையாளர்கள் கூடுதல் விலைக்கு தரமற்ற எம்.சேண்ட் உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றனர். தரமற்ற எம்.சேண்ட் மூலம் கட்டப்படும் அரசு மற்றும் தனியார் கட்டுமானங்கள் பல இடிந்து விழும் நிலையில் உள்ளன.தற்போது உள்ள சூழலில் கோர்ட்டோ, மத்திய அரசோ, அமலாக்கத்துறையோ தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை மூடி வைக்க வேண்டும் என்று எந்த உத்தரவு அளிக்கவில்லை. இந்த நிலையில் 7 மாதங்களாக தொடர்ந்து அரசு மணல் குவாரிகள் இயங்காத நிலையில் இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இயக்கப்பட்டுவந்த, சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மணல் லாரிகள் இயங்காமல் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான லாரி உரிமையாளர்களும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும், மணல் ஏற்றிச் செல்லும் மாட்டு வண்டி உரிமையாளர்களும், தொழிலாளர்களும் வேலை வாய்ப்பின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வந்த அனைத்து அரசு மணல் குவாரிகளையும் திறந்து பொதுமக்களுக்கும், லாரி உரிமையாளர்களுக்கும், நேரடியாக ஆன்லைன் மூலம் ஆற்று மணல் வழங்கவேண்டும் என்று கோரி பல முறை போராட்டம் நடத்தியும் தமிழக அரசு இதுவரை கண்டுகொள்ளவில்லை. எனவே தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற செப்டம்பர் 4ம் தேதி புதன்கிழமை பகல் 11 மணிக்கு, நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கீரம்பூரில் உள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மணல் லாரி உரிமையாளர்களின் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள காலாவதியான 22 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் வசிப்பவர்களின் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த 2022ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்துள்ளது. அதை சுங்கச்சாவடி கான்ட்ராக்டர்கள் அமல்படுத்த வேண்டும். செப்டம்பர்-1 முதல் உயர்த்தப்படும் சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் சுங்கச்சாவடி மறியல் போராட்டத்தில், போலீசார் லாரி உரிமையாளர்களை கைது செய்து கல்யாண மண்டபத்தில் அடைத்தால், அங்கும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவோம் என அவர் தெரிவித்தார்.

Similar News