சேலம் வனத்துறைக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

வனத்துறையினர் நடவடிக்கை;

Update: 2025-08-01 13:29 GMT
ஓமலூர் தொகுதிக்கு உட்பட்ட தேக்கம்பட்டி கிராமம் வட்டக்காடு பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாய நிலமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து இந்த நிலம் சம்பந்தமாக வனத்துறையினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு பல ஆண்டுகளாக கோர்ட்டில் நடந்து வந்தது. தற்போது நிலம் வனத்துறைக்கு சொந்தமானது என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங் ரவி தலைமையில் உதவி வனப்பாதுகாவலர் செல்வகுமார், கருப்பூர் வருவாய் ஆய்வாளர் அசோக் குமார் ஆகியோர் முன்னிலையில் வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் நிலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் 3 பொக்லைன் எந்திரங்களை கொண்டு நிலத்தில் உள்ள தென்னை மரங்கள் மற்றும் விவசாய பயிர்களை அகற்றி சமன்படுத்தினர். தொடர்ந்து மீட்கப்பட்ட நிலத்தில் மரக்கன்றுகள் நடுவதற்காக குழியை தோண்டினர். பின்னர் வனத்துறை சார்பில் பெயர் பலவகை மரக்கன்றுகள் உடனடியாக நடுவதற்கு ஏற்பாடு செய்தனர். இந்த நிலத்தை பயன்படுத்தி வந்தவர்களின் எதிர்ப்பு காரணமாக இந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News